இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அரசாங்கம் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை அறிவித்துள்ளது.
இதன்படி, புலம்பெயர்ந்தவர்கள் தாம் வசிக்கும் நாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்கள் மூலம் தமக்கான பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் மற்றும் இறப்புச் சான்றிதழ்களை தாமதமின்றி பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த முன்னோடி முயற்சியை, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நேற்று (06.01.2025) அதிகாரபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.
ஜப்பான், கட்டார், குவைத் தூதரகங்கள் மற்றும் மிலானோ, டொறொன்டோ, மெல்பேர்ன், துபாய் ஆகிய நாடுகளின் துணைத் தூதரகங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து இலங்கை தூதரகங்களிலும் இந்த சேவையை விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த திட்டம் புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கு ஆவணச் சேவைகளில் ஏற்படும் தாமதங்களை குறைத்து அவர்களின் தேவைகளை துரிதமாக நிறைவேற்றும் முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.