நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஹைதராபாத் போலீஸார் மீண்டும் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சி கடந்த டிசம்பர் 4-ம் தேதி இரவு ஹைதராபாத் சந்தியா திரையரங்கில் திரையிடப்பட்டது. அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி (35) என்பவர் உயிரிழந்தார். நெரிசலில் படுகாயமடைந்த இவரது மகன் ஸ்ரீதேஜ் (9) ஹைதராபாத் கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ரேவதி குடும்பத்துக்கு தெலங்கானா அரசு சார்பில் ரூ. 25 லட்சமும், புஷ்பா படக்குழு தரப்பில் ரூ.2 கோடியும் வழங்கப்பட்டன. இதனிடையே நடிகர் அல்லு அர்ஜுன், திரையரங்கு உரிமையாளர், மேலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதில் அல்லு அர்ஜுனுக்கு நிரந்தர ஜாமீனும் வழங்கப்பட்டுவிட்டது.
இந்த சூழலில் ஹைதராபாத் ராம்கோபால்பேட்டா போலீஸ் நிலையத்தில் இருந்து நடிகர் அல்லு அர்ஜுனுக்கு நேற்று நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதில், கிம்ஸ் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் ஸ்ரீதேஜ்ஜை, அல்லு அர்ஜுன் சந்திக்க வரக்கூடாது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
நடிகர் அல்லு அர்ஜுன் நேரில் வந்தால் சாட்சியை மாற்றிவிடக் கூடும். அவர் மருத்துவமனைக்கு வந்தால் மீண்டும் கூட்ட நெரிசல் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. எனவே அவர் கிம்ஸ் மருத்துவமனைக்கு வரக்கூடாது என்று நோட்டீஸ் வழங்கப்பட்டு இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.