களுத்துறை, பண்டாரகம, மெதகம, ஹந்துன்வென்ன ஆகிய பிரதேசங்களுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர், தங்களை பொலிஸ் உத்தியோகத்தர்கள் என அடையாளப்படுத்தி, ஒரு பழ வியாபாரியிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, 150,000 ரூபா பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லுணுகம்வெஹர பகுதியில் வசிக்கும் குறித்த பழ வியாபாரி, களுத்துறை மற்றும் பேருவளை பகுதிகளில் உள்ள கடைகளுக்கு வாழைப்பழங்களை விற்பனை செய்ய நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை – ஜனவரி 5) தனது லொறியில் பயணமாகியிருந்தார்.
மாலை நேரத்தில், பண்டாரகம பகுதியில் உள்ள ஹந்துன்வென்ன பிரதேசத்தில், ஒரு பழக்கடைக்கு முன்பு லொறியை நிறுத்தி வாழைப்பழங்களை விற்பனை செய்த பிறகு, மீண்டும் லொறியில் ஏற முயன்ற போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த 150,000 ரூபா பணத்தை கொள்ளையிட்டுள்ளதாக தகவல்கள் வெளிகியாகியுள்ளன.
இந்நிலையில், கொள்ளையர்கள் சம்பவத்துக்குப் பின்னர் தப்பிச் சென்றதாகவும், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு நடைபெறும் சம்பவங்கள் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இடத்தில் பாதுகாப்பு குறித்த முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளன.