‘மதகஜராஜா’ விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் விஷாலின் உடல்நிலையைக் கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மதகஜராஜா’ திரைப்படம் சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகிறது. இதன் விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விஷாலின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. கையில் மைக்கை பிடித்து அவரால் பேசவே முடியவில்லை. கை நடுங்கிக் கொண்டே இருந்தது.
விஷால் முழுமையாக பேசி முடித்தவுடன், நிகழ்ச்சி தொகுப்பாளர் டிடி “விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல். படத்தின் விளம்பர நிகழ்வுக்கு கடும் காய்ச்சலுடனே வந்துள்ளார்” என்று தெரிவித்தார். விஷால் கை நடுக்கத்துடன் பேசும் வீடியோ பதிவு, இணையத்தில் பெரும் வைரலானது. பலரும் விஷால் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்று விழைவு தெரிவித்து வருகிறார்கள்.
விஷால், வரலட்சுமி, அஞ்சலி, சந்தானம், சோனு சூட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மதகஜராஜா’. ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.