தொடர்ச்சியாக சித்தாண்டி பகுதியில் நடைபெறும் யானைகளின் தாக்குதலை கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தியும் முறையான நடவடிக்கைகள் எடுக்காத அதிகாரிகளை கண்டித்துமே அப் பிரதேச மக்களால் நேற்று (01) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு சித்தாண்டி உதயன்மூலை கிராமத்திற்குள் புகுந்த யானைகள் வீடுகளை தாக்கி சேதனப்படுத்தியதில் மூவர் காயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மட்டக்களப்பு சித்தாண்டி உதயன்மூலை கிராமத்திற்குள் நேற்றிரவு (01) நள்ளிரவு நேரத்தில் உள் நுழைந்த யானைகள் மூன்று வீடுகளை தாக்கி சேதப்படுத்தி உள்ளது.
இதன் போது வீட்டில் இருந்த ஒரு வயது குழந்தை உட்பட மூவர் காயமடைந்த நிலையில் மாவடி வேம்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒரு வயது குழந்தை மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக அறிந்த தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு நேற்று (01) நள்ளிரவு 2 மணி அளவில் சம்பவம் இடத்திற்கு சென்று வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் உதவியுடன் கிராமத்திற்குள் நுழைந்த யானைகளை விரட்டி அடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் யானையின் தாக்குதலுக்கு உள்ளான குடும்பங்களை நேரடியாக சென்று சந்தித்து கலந்துரையாடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களையும் பார்வையிட்டதோடு யானைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அதிகர்களுக்கு பணிபுரை வழங்கியுள்ளார்.
இதேவேளை யானைகளிடமிருந்து தங்களுக்கான பாதுகாப்பை வழங்குமாறு கோரி கிராம மக்கள் மட்டக்களப்பு-கொழும்பு பிரதான வீதியில் நேற்று (01) கடும் மழைக்கும் மத்தியிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறிநேசன், இ. சிறிநாத் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.