குறித்த விபத்தில் 85 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது. இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார் எனவும் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் ஒரு தீயணைப்பு துறை அதிகாரி ராய்ட்டர்ஸ் செய்தி ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.
விமானத்தின் பின்புறத்தில் உள்ள பயணிகளை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருவதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விமான பயணிகளில் 173 பேர் தென் கொரியர்கள் எனவும், 2 பேர் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் எனவும் யோன்ஹாப் செய்தி முகமை கூறுகிறது.
இறந்த 85 பேரில் 46 பெண்கள் பேர் பெண்கள் என்றும், 39 பேர் ஆண்கள் என்றும் தேசிய தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள உறுதிப்படுத்தப்படாத காணொளியில், விமானம் சறுக்கிக்கொண்டே ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று சுவரில் மோதுவது போலவும், பின்னர் இந்த விமானத்தில் தீ பிடித்தது போலவும் காட்சிகள் காணப்படுகின்றன.
ஒரு விமானப் பணியாளர் மற்றும் ஒரு பயணி மீட்கப்பட்டுள்ளதாகக் கூறும் தீயணைப்புத்துறை, 80 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 30 தீயணைப்பு வாகனங்கள் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
விமான பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் தரும் துறையாகத் தென் கொரியாவின் விமானப் போக்குவரத்துத் துறை கருதப்படுகிறது. ஜேஜூ விமான நிறுவன வரலாற்றில் இதுவே முதல் உயிரிழப்புகளைக் கொண்ட மோசமான விபத்தாகும்.
தென் கொரியாவின் மிகப்பெரிய குறைந்த கட்டண விமான நிறுவனமான இது 2005ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.