இலங்கை தமிழ் அரசு கட்சியின் இடைக்கால பதில் தலைவராக சீ.வீ.கே.சிவஞானம் பதவி வகிப்பார் என அந்த கட்சியின் மத்தியகுழு தீர்மானம் எடுத்துள்ளது.
இன்று (28) வவுனியாவில் நடந்த மத்தியகுழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
இன்றைய கூட்டத்துக்கு மாவை சேனதிராசா வரவில்லை.
அவர் பதவிவிலகல் கடிதம் கொடுத்து விட்டார், அது ஏற்றுக்கொள்ளப்பட்டு பதில் பொதுச்செயலாளர் அடுத்த நடவடிக்கைகளுக்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார் என கூறப்பட்டது.
இதை தொடர்ந்து புதிய பதில் தலைவராக சீ.வீ.கே.சிவஞானத்தை நியமிப்பதென முன்மொழியப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கட்சியின் பதவிநிலைகளில் மாற்றம் செய்யும் அதிகாரம் மத்தியகுழுவுக்கு இல்லை, இந்த பிழையான தீர்மானத்தில் நான் பங்கேற்கவில்லையென குறிப்பிட்டு வைத்தியர் சிவமோகன் வெளிநடப்பு செய்தார்.
மாவை சேனாதிராசா கட்சியின் பெருந்தலைவராக இருப்பார் என சிலர் கூற முற்பட்ட போது, கட்சி யாப்பில் இல்லாத பதவிகளை வழங்குவதில் அர்த்தமில்லையென சி.சிறிதரன் தெரிவித்தார். இதனால் அந்த யோசனை கைவிடப்பட்டது.
கட்சியின் பேச்சாளர் யாரென்ற விடயம் ஆராயப்பட்ட போது, கட்சியின் பேச்சாளராக எம்.ஏ.சுமந்திரனும், பாராளுமன்ற குழு பேச்சாளராக ஞா.சிறிநேசனும் செயற்படுவார்கள் என கூறப்பட்டது. மத்தியகுழு கூட்டத்தின் பின், பதில் தலைவர் சிவஞானம் இதனையும் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
கடந்த தேர்தல்களில் கட்சியை விட்டு, பிற கட்சிகளில் தேர்தலில் போட்டியிட்டவர்களை கட்சியை விட்டு நீக்குவதென்றும், கட்சிக்கு எதிராக செயற்பட்டவர்களை இடைநிறுத்தி விசாரணை செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி வைத்தியர் சிவமோகனும் இடைநிறுத்தப்பட்டார்.
கட்சியின் 75வது மாநாட்டை மட்டக்களப்பில் நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.