கஜகஸ்தானில் அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளாகி 38 பேர் உயிரிழந்த சம்பவம், ரஷ்யாவின் வான் ஏவுகணையால் ஏற்பட்டதாக அஜர்பைஜான் அதிகாரிகள் நம்புவதாக பல ஊடகங்கள் வியாழக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த ஜெட் விமானம் புதன்கிழமை நாட்டின் தலைநகர் பாகுவிலிருந்து தெற்கு ரஷ்யாவின் செச்னியாவில் உள்ள க்ரோஸ்னி நகருக்கு சென்று கொண்டிருந்தது, ஆனால் கஜகஸ்தானின் அக்டாவ் அருகே விபத்துக்குள்ளானது.
அஜர்பைஜான் அரசாங்க ஆதாரங்களை மேற்கோள் காட்டி யூரோநியூஸ் வெளியிட்ட செய்தியில், “விமானத்தின் நடுப்பகுதியில் வெடிப்பு நிகழ்ந்ததால் பயணிகள் மற்றும் பணியாளர்கள் மீது துண்டுகள் விழுந்தன.” என தெரிவித்தது.
இராணுவம் மற்றும் விமானப் போக்குவரத்து வல்லுநர்கள் விமானத்தின் உடற்பகுதி துண்டு துண்டாக சேதமடைந்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ளனர்.
யூரோநியூஸ் அதன் ஆதாரங்களை மேற்கோள் காட்டி, சேதமடைந்த விமானம் “அவசர தரையிறக்கத்திற்கான விமானிகளின் கோரிக்கைகள் இருந்தபோதிலும், எந்த ரஷ்ய விமான நிலையத்திலும் தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை.”
அதற்கு பதிலாக விமானம் காஸ்பியன் கடலின் குறுக்கே- அதன் அசல் பாதையிலிருந்து வெகு தொலைவில்- அக்டாவ் வரை பறக்க உத்தரவிடப்பட்டது என்று அவர்கள் கூறினர்.
துருக்கியின் உத்தியோகபூர்வ அனடோலு செய்தி நிறுவனம் இதேபோன்ற அறிக்கையை விசாரணையின் ஆரம்ப முடிவுகளை மேற்கோள் காட்டி, க்ரோஸ்னியை நெருங்கும் போது “விமானம் Pantsir ஏவுகணை அமைப்பு மூலம் தாக்கப்பட்டது” என்று கூறியது.
உக்ரேனிய ட்ரோன் தாக்குதல்கள் சமீபத்திய வாரங்களில் செச்சினியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் விபத்துக்கு முன்னர் அருகிலுள்ள இங்குஷெட்டியா மற்றும் வடக்கு ஒசேஷியாவில் ட்ரோன் செயல்பாடு இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
“ரஷ்ய மின்னணு போர் முறைமைகளைப் பயன்படுத்தியதால் விமானத்தின் தகவல் தொடர்பு அமைப்பு முற்றிலுமாக முடங்கியது, இதன் விளைவாக ரஷ்ய வான்வெளியில் இருந்தபோது ரேடார்களில் இருந்து விமானம் காணாமல் போனது” என்று அனடோலு அறிவித்தது.
“இரண்டு அஜர்பைஜானியர்கள் அரசாங்க விசாரணையில் விளக்கமளித்தனர், அஜர்பைஜான் அதிகாரிகள் இப்போது ரஷ்ய பான்சிர்-எஸ் பாதுகாப்பு அமைப்பு விமானத்தை சேதப்படுத்தியதாக நம்புகிறார்கள்.” என நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது,
ஒரு அமெரிக்க அதிகாரி, பெயர் தெரியாத நிலையில், வியாழன் அன்று, ரஷ்ய விமான எதிர்ப்பு அமைப்பு அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானத்தைத் தாக்கியதாக ஆரம்ப அறிகுறிகள் தெரிவிக்கின்றன என்று கூறினார்.
முன்னதாக, விமானம் பறவைகள் கூட்டத்தின் வழியாக பறந்ததாக அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் கூறியது. பறவை மோதியதால் ஆபத்து நிகழ்ந்திருக்கலாமென கூறியது. ஆனால் பின்னர் அந்த அறிக்கையை வாபஸ் பெற்றது.
ரஷ்யாவின் ஏவியேஷன் ஏஜென்சியும் பறவைகள் ஒரு சாத்தியமான காரணம் என்று குறிப்பிட்டுள்ளது.
விமானம் “குறிப்பிடத்தக்க ஜிபிஎஸ் குறுக்கீட்டை” அனுபவித்ததாக சிறப்பு இணையதளமான Flightradar24 கூறியது.
விமானம் சில நிமிடங்களுக்கு “நிலை தரவுகளை அனுப்புவதை நிறுத்தியது” என்று அது கூறியது.
விமானத்தில் 62 பயணிகள் மற்றும் 5 பணியாளர்கள் இருந்தனர்.
கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் வியாழன் அன்று உத்தியோகபூர்வ கசாக் விசாரணை முடிவதற்குள் விபத்து பற்றிய “கருத்துகளுக்கு” எதிராக எச்சரித்தார்.