2004ஆம் ஆண்டு இலங்கையில் 35,000க்கும் அதிகமான மக்களைக் கொன்ற பேரழிவு சுனாமியின் 20வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. களனிதிஸ்ஸ மன்னன், கவுந்திஸ்ஸ, மகாராணி விஹாரமஹாதேவி ஆகியோரின் காலத்தில் கடல் அலைகள் இலங்கைக்குள் நுழைந்ததாக கூறப்பட்ட போதும், நவீன வரலாற்றில் இப்படியொரு அனர்த்தத்துக்கு தயாராக இல்லாத இலங்கையை, அன்று சுனமி புரட்டிப் போட்டது.
பேரழிவின் போது காணாமல் போன சுமார் 5,000 பேர் பற்றி இன்று வரை எந்த தகவலும் இல்லை.
அந்த உயிர்களை நினைவுகூரும் வகையில் தேசிய பாதுகாப்பு தின நினைவேந்தல் இன்று (26) காலை 9.00 மணிக்கு பாதுகாப்பு அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ பிரிவில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் பிரதி பாதுகாப்பு அமைச்சர் தலைமையில் பாதுகாப்பு செயலாளர் கலந்து கொள்ளவுள்ளார். அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஏற்பாடு செய்துள்ள மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் இதேபோன்ற அனுசரிப்புகள் மாவட்டங்கள் முழுவதும் நடைபெறும்.
சுனாமி மற்றும் ஏனைய அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று காலை 9:25 முதல் 9:27 வரை இரண்டு நிமிட மௌனத்தை அனுசரிக்குமாறு அனைத்து இலங்கையர்களுக்கும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அழைப்பு விடுத்துள்ளது.