கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால், 2025ம் ஆண்டிற்கான மாகாண இலக்கிய விழா போட்டிகளை நடத்தி விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கலைஞர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள் என கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்தோரை இனங்கண்டு, அவர்களது திறமைக்கு பாராட்டுக்களை வழங்கி கௌரவிப்பதன் மூலம், அவர்களது கலை இலக்கியப் பணிகளுக்கு அங்கீகாரம் வழங்கவும், எதிர்கால சந்ததியினருக்கு படைப்புலக முன்னோடிகளாக அவர்களை இனங்காட்டுவதனை நோக்காகக் கொண்டும், இவ் விழா ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில், 2024ம் ஆண்டு வெளியிடப்பட்ட சிறந்த நூல்கள், இலக்கிய சஞ்சிகைகள், குறுந்திரைப்பட ஆக்கங்களைத் தேர்வு செய்யும் பொருட்டு, கிழக்கிலங்கை எழுத்தாளர்களுக்கும், குறுந்திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் தமது படைப்புக்களைச் சமர்ப்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆகக்குறைந்தது ஐந்து வருடங்களை நிரந்தர வதிவிடமாக கொண்ட கிழக்கு மாகாணத்தின் இலக்கிய கர்த்தாக்கள், கலைஞர்கள், துறைசார் வல்லுனர்கள் இவ்விருதுக்கு தகுதியானவர்களாக என வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வருடாந்தம் மேற்கொள்ளப்படும் ‘கிழக்கு மாகாண எழுத்தாளர்களின் நூல்களை கொள்வனவு செய்யும் திட்டமானது’ இவ் வருடமும் இடம்பெற உள்ளது. 01.01.2024 – 31.12.2024 வரை கிழக்கு மாகாண படைப்பாளிகளால் வெளியீடு செய்யப்பட்ட நூல்கள் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நூல் கொள்வனவுத் திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும், தகுதியுடையோர் இதற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண படைப்பாளிகளின் கையெழுத்துப்பிரதி ஆக்கங்களை நூல் வடிவில் வெளியீடு செய்வதற்கு இவ்வருடமும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.