26.3 C
Jaffna
December 25, 2024
Pagetamil
இந்தியா

3 கணவர்களிடமும் இயற்கைக்கு மாறான உறவு குற்றச்சாட்டு: பெண் கைது!

மூன்று இளைஞர்களை திருமணம் செய்து ரூ.1.25 கோடி சுருட்டிய சீமா அகர்வால் கைது செய்யப்பட்டு உள்ளார்.

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர், திருமண வரன் தேடும் இணையத்தில் சுயவிவரங்களை பதிவு செய்திருந்தார். இந்த இணையம் வாயிலாக கடந்த 2023-ம் ஆண்டு ஜூலையில் உத்தராகண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்த சீமா அகர்வால் என்ற பெண் அறிமுகமானார். இருவரும் சமூக வலைதளங்கள், செல்போன் வாயிலாக காதலை வளர்த்தனர்.

சீமா அகர்வாலின் அழகு, அன்பான பேச்சில் மயங்கிய நகைக்கடை உரிமையாளர், அவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். தனது குடும்பத்தினருடன் டேராடூன் சென்று மணமகள் வீட்டாரிடம் பேசினார். இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த பிப்ரவரி மாதம் ஜெய்ப்பூரில் நகைக்கடை உரிமையாளருக்கும் சீமா அகர்வாலுக்கும் விமரிசையாக திருமணம் நடைபெற்றது.

சில மாதங்களுக்குப் பிறகு சீமா அகர்வால் திடீரென மாயமானார். வீட்டில் இருந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், ரூ.6.5 லட்சம் ரொக்கத்தையும் காணவில்லை. இதனால் நகைக்கடை உரிமையாளர் அதிர்ச்சியில் உறைந்தார்.

இதனிடையே டேராடூன் திரும்பிய சீமா அகர்வால், உள்ளூர் போலீஸ் நிலையத்தில் நகைக்கடை உரிமையாளர் மீது புகார் அளித்தார். அதில், இயற்கைக்கு மாறான உடல் உறவு, வரதட்சிணை கேட்டு கணவர் சித்ரவதை செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார். இதை அறிந்து பேரதிர்ச்சியில் உறைந்த நகைக்கடை உரிமையாளர், தனது தரப்பு நியாயத்தை முன்வைத்து ஜெய்ப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகார் குறித்து ஜெய்ப்பூர் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் நகைக்கடை உரிமையாளர் கூறுவது உண்மை என்பதும் சீமா அகர்வால் பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார் என்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஜெய்ப்பூர் போலீஸார் அண்மையில் டேராடூனுக்கு சென்று சீமா அகர்வாலை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளி வந்துள்ளன.

இதுகுறித்து ஜெய்ப்பூர் மேற்கு பகுதி போலீஸ் டிசிபி அமித் குமார் கூறியதாவது: திருமண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சீமா அகர்வால் இதுவரை 3 திருமணங்களை செய்துள்ளார். முதலில் அவர் உத்தர பிரதேசத்தின் ஆக்ராவை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்திருக்கிறார். சில மாதங்களுக்கு பிறகு தொழிலதிபரின் வீட்டில் இருந்து நகை, பணத்துடன் அவர் தலைமறைவாகிவிட்டார்.

பின்னர் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது டேராடூன் போலீஸ் நிலையத்தில் சீமா புகார் அளித்துள்ளார். இயற்கைக்கு மாறான உடல் உறவில் கணவர் ஈடுபட்டதாக அவர் புகார் கூறியதால் ஆக்ரா தொழிலதிபர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கை வாபஸ் பெற ஆக்ரா தொழிலதிபரிடம் இருந்து ரூ.75 லட்சத்தை சீமா அகர்வால் மிரட்டி பெற்றுள்ளார்.

இதன்பிறகு ஹரியானா மாநிலம் குர்காவ்ன் நகரை சேர்ந்த சாப்ட்வேட் இன்ஜினீயரை, சீமா திருமணம் செய்துள்ளார். சில மாதங்களுக்கு பிறகு 2-வது கணவரின் வீட்டில் இருந்து நகை, பணத்துடன் அவர் தலைமறைவாகிவிட்டார். வழக்கம்போல டேராடூன் காவல் நிலையத்தில் 2-வது கணவர் மீதும் புகார் அளித்தார். அதில் கணவர் இயற்கைக்கு மாறான உடல் உறவுக்கு வற்புறுத்தினார். கணவரின் தம்பி பாலியல் வன்கொடுமை செய்தார் என்று குற்றம் சாட்டினார். இந்த வழக்கை வாபஸ் பெற குர்காவ்ன் சாப்ட்வேட் இன்ஜினீயரிடம் இருந்து ரூ.10 லட்சத்தை சீமா பெற்றுள்ளார்.

இதன்பிறகு ஜெய்ப்பூரை சேர்ந்த நகைக்கடை உரிமையாளரை சீமா 3-வதாக திருமணம் செய்திருக்கிறார். நகைக்கடை உரிமையாளரின் முதல் மனைவி உயிரிழந்துவிட்ட நிலையில் மறுமணம் செய்து கொள்ள அவர் இணையத்தில் பதிவு செய்திருந்தார். இந்த விளம்பரத்தை பார்த்து சீமா அகர்வால், நகைக்கடை உரிமையாளரை தொடர்பு கொண்டு தனது வலையில் வீழ்த்தியிருக்கிறார்.

தற்போதைய விசாரணையில் சீமா அகர்வாலின் 3 திருமண மோசடிகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. முதல் கணவரிடம் ரூ.75 லட்சம், 2-வது கணவரிடம் ரூ.10 லட்சம், 3-வது கணவரிடம் இருந்து 30 லட்சம் மதிப்பு நகைகள், ரூ.6.5 லட்சம் ரொக்கத்தை சீமா அபகரித்து உள்ளார். மூன்று இளைஞர்களிடம் இருந்தும் அவர், சுமார் ரூ.1.25 கோடியை சுருட்டி உள்ளார். வேறு யாரையாவது திருமணம் செய்து சீமா அகர்வால் ஏமாற்றினாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு போலீஸ் டிசிபி அமித் குமார் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தமிழக மீனவர்கள் கைது, தாக்குதல் சம்பவம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Pagetamil

12 இளைஞர்களை காதலித்து ஏமாற்றிய பெண்: 19 வயது இளைஞருடன் ஓட்டம்

Pagetamil

இன்ஸ்டா காதலால் விபரீதம்: நீரில் மூழ்கி 3 பேர் பலி!

Pagetamil

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் ஏன்? – மத்திய அரசு முன்வைக்கும் காரணங்கள்

Pagetamil

கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் கைது

Pagetamil

Leave a Comment