திருக்கோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக மிக நீண்ட காலம் பதவி வகித்த இ ரா சம்பந்தன் தேசிய இனப் பிரச்சினையை கையாளுதல் என்ற முகமூடியின் கீழ் “திருக்கோணமலை மக்களின் பாராளுமன்ற உறுப்பினர்” என்ற கடமை கை கழுவிச் காலம் கடத்தியிருந்தார். குறிப்பாக தமிழ் மக்களின் வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்ட இ ரா சம்பந்தன் திருக்கோணமலை தமிழர்களின் முக்கிய பிரச்சினைகள் கையாளப்பட வேண்டிய திருக்கோணமலை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தன்னுடைய குரலை வழங்குவதற்கும் மறுத்து இருந்தார். குறிப்பாக தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகள் அரசினால் திட்டமிட்டு கையாளப்பட்ட கூட்டங்களில் சம்பந்தன் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்யவில்லை.
இந்நிலையில் இம்முறை பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள சண்முகம் குகதாசன் அவர்கள் இவ்வாறான விடயங்களுக்கு மாற்றாக செயல்படுவார் என மக்கள் நம்பிக்கொண்டிருந்த நிலையிலும் அவரும் மீண்டும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இன்று (24.12.2024) திருக்கோணமலை மாவட்ட அபிவிருத்தி குழுவின் கூட்டம் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தலைமையில் இடம் பெற்றுள்ளது. பாராளுமன்ற தேர்தலின் பின் நடக்கும் முதல் கூட்டம் இதுவாகும். எனினும் திருக்கோணமலை தமிழ் மக்களின் தேசிய நிலைப்பாட்டை வெளிப்படுத்த பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட சண்முகம் குகதாசன் கூட்டத்தில் பங்கு கொள்ளவில்லை. அதைவிட அவரது சார்பாக கூட யாரும் பங்கு கொள்ளவில்லை.
மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் பங்கு கொள்ளாமல் எங்கு சென்றார் குகதாசன்?
கனடாவில் ஸ்ரீதரன் உடன் முக்கிய சந்திப்புகளில் ஈடுபட்டு வருவதான செய்திகள் கிடைக்கப்பெறுகின்றது. எனினும் அந்த செய்திகளில் குகதாசனின் பங்கு பெருமளவில் வெளிப்படுத்தப்படுவதாக தெரியவில்லை. குறிப்பாக திருக்கோணமலையிலிருந்து இந்தியாவுக்கு இடம்பெயர்ந்த மக்களை மீளக் கொண்டு வந்து குடியேற்றுவதற்கான செயற்பாடுகளை அவர் மேற்கொண்டு வருவதாக கனடாவில் கூட்டங்களில் பேசினாலும், இதுவரை திருக்கோணமலையில் அவ்வாறான செயற்பாடுகள் பாரியளவில் நடைபெற்றதாக எந்த ஒரு பதிவிலும் இல்லை. மேலும் இந்தியாவிலிருந்து மீள இலங்கைக்கு வருகை தந்த பலர் போதிய அளவு வசதிகள் இங்கே கிடைக்காமையினால் மீண்டும் இந்தியாவுக்கே திரும்பிச் செல்லும் நிலைகளும் நடந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் கனடாவில் நடக்கும் அதிகளவான கூட்டங்களில் தனக்கான கௌரவிப்பை வாங்கிக் கொள்வதற்கு குகதாசன் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்வதும் புகைப்படங்கள் ஊடாக அறிய கிடைக்கின்றது.
பாராளுமன்ற உறுப்பினர் பதவியானது ஒரு கௌரவிப்புக்கான பதவி அல்ல. குறிப்பாக திருக்கோணமலை போன்ற தமிழ் மக்களின் குரல் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக வெளிப்படுத்தப்படுகின்ற மாவட்டங்களில் தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர் மக்களின் பிரச்சினைகளை 24 மணி நேர கவனிப்புடன் கையாள வேண்டிய சூழ்நிலையில் கண்டும் காணாமல் இவ்வாறு வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு வருவது விரும்பத்தக்க விடையம் அல்ல.
இவ்விடயம் தொடர்பில் இன்றைய திருக்கோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அரச அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், இன்றைய கூட்டத்தில் குகதாசன் கட்டாயம் பங்கு கொள்வார் என தாங்கள் எதிர்பார்த்து இருந்ததாகவும், எனினும் அவர் பங்குகொள்ளவில்லை என்பதும், திருக்கோணமலை மாவட்ட தமிழர்களின் காணிப் பிரச்சினைகள் தொடர்பில் ஏற்கனவே பல முரண்பாடுகள் காணப்படும் நிலையிலும் அவற்றை திருக்கோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் ஊடாக கையாள வேண்டிய பல சந்தர்ப்பங்களை ஏற்கனவே நாங்கள் தவறவிட்ட நிலையில் இன்னும் அது தொடர்கின்றது என்று தன்னுடைய கவலையை வெளிப்படுத்தினார்.
மேலும் இலங்கை தமிழரசு கட்சியின் திருக்கோணமலை மாவட்ட கிளையின் தலைவராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் காணப்படும் குகதாசன் அவர்கள் தங்களுடைய கட்சியின் 75வது நினைவு ஆண்டு திருக்கோணமலையில் மாவட்டத்தில் குறைந்த அளவு நினைவு கூற கூட அடுத்த கட்ட தலைமைகளை இன்னும் உருவாக்காமல் இருப்பது கவலைக்குரிய விடயம்.
அடுத்து குகதாசன் லண்டன் பயணம் ஒன்றையும் மேற்கொள்ளவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
குகதாசனின் பதில் என்ன?