அநுராதபுரம், கட்டுகலியாவ கல்பொத்தேகம பிரதேச கடுகம்பளைகம காப்புக்காடு பகுதியில் பாரிய மரங்களை வெட்டி மொரகொல்லாகம ஏரிக்காப்பிற்குள் பிரவேசித்த இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சட்ட விரோத செயற்பாட்டில் ஈடுபட்ட இருவரும் பேக்ஹோ, உழவு இயந்திரம் மற்றும் வெட்டப்பட்ட மரங்களுடன் கைது செய்யப்பட்டதாக அனுராதபுரம் தள வன அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
அனுராதபுரம் கல்பொத்தேகம மற்றும் கல்பாலம பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய சந்தேக நபர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சோதனையின் போது இரண்டு சந்தேக நபர்களால் வெட்டப்பட்ட பெரிய மரங்களை பேக்ஹோ உதவியுடன் உழவு இயந்திரத்தில் ஏற்றிக் கொண்டிருந்ததாகவும், மேலும் பல மரங்கள் வெட்டப்பட தயார் நிலையில் இருந்ததாகவும் கள உதவியாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
இச்சோதனையின் போது, சந்தேகநபர்கள் வசமிருந்த பதினைந்து மரக்குற்றிகளும், 10 முதல் 15 அடி சுற்றளவு கொண்ட ஒன்பது பெரிய மரங்களும் கண்டெடுக்கப்பட்டு, மரக்குற்றிகள் மற்றும் பெரிய மரங்கள் மரக் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக வனப் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.