மிருசுவில் படுகொலை நடந்து 20.12.2024ம் திகதியுடன் 24 வருடங்களாகிறது. 8 அப்பாவிப் பொது மக்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அதில் குழந்தைகளும் உள்ளடங்கியிருந்தனர்.
உள்நாட்டு போரின் மத்தியில், ஒரு ஒழுங்கீன செயல் எனக் கருதப்படுவதும், பொதுமக்கள் மீது நிகழ்ந்த ஒரு மிருகத்தனமான வன்முறைச் சம்பவமாக அறியப்பட்டதே மிருசுவில் படுகொலையாகும்.
மிருசுவில் படுகொலை என்றால் என்ன என்று அறியாத இளைய சமுதாயமும் இன்று இருக்கத்தானே செய்கின்றது. இதில் இளையோரின் தவறு ஏதும் இல்லை. இளையோரிடம் தமிழ் சமுதாயத்திற்கு இழைக்கப்பட்ட துரோகங்கள் பற்றிய உண்மைத்தன்மைகள் கொண்டு சேர்க்கப்படாமையே இதற்கு காரணம்.
படுகொலை செய்யப்பட்ட அவ் எண்மரும் என்ன தவறிழைத்தார்கள்? குழந்தைகள் கூடவா தவறிழைத்தார்கள்?
யாழ்ப்பாணம், சாவகச்சேரி, மிருசுவில் கிராமத்தில் 2000ஆம் ஆண்டு டிசம்பர் 20ம் திகதி 3, 5 வயது குழந்தைகள் உட்பட எட்டு தமிழ் அகதிகள் இனவாதம் காரணமாக படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
தமது வீடுகளை விட்டு வெளியேறிய எட்டுப் பொதுமக்கள் தமது வீடுகளைச் சென்று பார்ப்பதற்காக யாழ்ப்பாண நகரில் இருந்து 16 மைல்கள் தொலைவில் உள்ள மிருசுவிலுக்குச் சென்ற போதே, 19.12.2000ல் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, 20.12.2000இல் அடித்தும், வெட்டியும் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டார்கள்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பலத்த காயங்களுடன் இத்தாக்குதல்களில் இருந்து தப்பி வந்து தனது உறவினர்களுக்குக் கொடுத்த தகவலை அடுத்தே இக்கொலைகள் பற்றிய விபரங்கள் மற்றைய கொலைகள் போல் மறைக்கப்படாமல் வெளி உலகிற்கு தெரிய வந்தன.
இச் சம்பவம் தொடர்பான விசாரணையின் பொருட்டு, மேல்நிலை நீதிமன்ற நீதிபதிகள், படுகொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்டிருந்த இடத்தை பார்க்க சென்றிருந்தனர்.
இப் படுகொலையை முன்னின்று நடத்திய சுனில் ரத்நாயக்க ஆதாரங்களுடன், கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். செய்த குற்றத்தின் பொருட்டு இலங்கைத் தரைப்படையைச் சேர்ந்த சுனில் ரத்னநாயக்க என்பவருக்கு கொழும்பு நீதிமன்றம் 2015 ஜூன் 25 அன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்ததோடு, இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த நான்கு இராணுவத்தினரை போதிய ஆதாரமின்மையால் விடுதலை செய்துமிருந்தது.
இருந்தபோதிலும், ஏதுமறியாத 3, 5 வயதுகளையுடைய குழந்தைகள் உட்பட 8 பேரைக் கொலை செய்தவருக்கு 27.03.2020 வரை மட்டும் வெறும் சிறை தண்டனை தான் முன்னாள் ஜனாதிபதியான கோட்டாவால் வழங்கப்பட்டு பின்னர் பொது மன்னிப்பும் வழங்கப்பட்டிருந்தது. இன்று வரையில், இந்தக் கொலைக்கான நியாயம் வழங்கப்படவில்லை.
இப் படுகொலை மட்டுமின்றி, இலங்கை இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட எந்தவொரு படுகொலைக்கும் நியாயம் கிடைக்கவுமில்லை, கிடைப்பதாகவும் இல்லை.