‘சூர்யா 44’ படத்தின் தலைப்புடன் கூடிய ‘டைட்டில் டீசர்’ இம்மாதம் 25ஆம் திகதி வெளியாகிறது. கிறிஸ்துமஸ் பரிசாக அன்றைய தினம் டைட்டில் டீசர் வெளியாகும் என்று 2டி நிறுவனம் அதிகாரபூர்மாக அறிவித்துள்ளது.
‘கங்குவா’ படத்துக்குப் பிறகு சூர்யா நடிக்கும் ‘சூர்யா 44’ படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இதில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம் உட்பட பலர் நடித்துள்ளனர். ஸ்ரேயா ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இறுதிகட்ட பணிகளும் நிறைவடையும் தருவாயில் உள்ளது.
2டி நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் கேங்க்ஸ்டர் படம் என தகவல் வெளியான நிலையில், இது காதல் கதையும் கூட என்று பேட்டி ஒன்றில் உறுதிப்படுத்தினார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்.
இந்தப் படத்தில் 15 நிமிடக் காட்சி ஒன்றை ஒரே டேக்கில் காட்சிப்படுத்தி இருக்கிறார்களாம். அந்தக் காட்சியில் வசன உச்சரிப்பு, பாடல், சண்டை என அனைத்துமே கலந்து இருக்கும் என்கிறது படக்குழு. இந்தக் காட்சிக்காக முன் தயாரிப்பு செய்யப்பட்டு, ஒரே டேக்கில் முடித்திருக்கிறது படக்குழு. இந்தக் காட்சி சரியாக வந்தப் பிறகு சூர்யாவுக்கு படக்குழுவினர் பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள் என்றும் படக்குழு ஏற்கெனவே தகவல் பகிர்ந்தது.
இந்நிலையில், ‘சூர்யா 44’ படத்தின் தலைப்புடன் கூடிய ‘டைட்டில் டீசர்’ இம்மாதம் 25ஆம் திகதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் உள்ள போஸ்டரில், ஸ்டைலாக இடப்பக்கம் பார்த்தவாறு நடந்தபடி காட்சியளிக்கிறார் சூர்யா. ரஜினியின் ‘தளபதி’ படத்தின் ஐகானிக் போஸ்டரை நினைவூட்டும் வகையில் அது அமைந்துள்ளது.
இதனிடையே, ‘சூர்யா 45’ படத்தின் படப்பிடிப்புக்கு இடையே ரசிகர்களை சந்தித்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்ட சூர்யா, “இனி வருடத்துக்கு இரண்டு படங்கள் வெளியாகும். அதில் நான் உறுதியாக இருக்கிறேன்” என்று உறுதி அளித்ததும் நினைவுகூரத்தக்கது.