நேற்று இரவு (21) நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரதல்ல குறுக்கு வீதியின் செங்குத்தான வளைவு ஒன்றில் கட்டுப்பாட்டை இழந்து லொறி ஒன்று மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த லொறியில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் இவ்விபத்து நேர்ந்துள்ளதாகவும், லொறியில் பயணித்தவர்கள் அதிஸ்ட வசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த வீதியூடாக கனரக வாகனங்கள் செல்வதை வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் தடை செய்யப்பட்டு, வீதியின் இருபுறங்களிலும் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்ட நிலையிலும் விபத்துக்கள் நிகழ்த்த வண்ணமே உள்ளதாகவும், இது குறித்து தாம் அச்சத்தில் உள்ளதாகவும், சிறிய வாகன சாரதிகள், இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வீதி ஓரங்களில் தொழில் புரிவோர் மற்றும் பாடசாலை மாணவர்கள் அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியில் கனரக வாகனங்கள் செல்லாமல் தடுப்புகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உரிய அதிகாரிகளிடம் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.