இலங்கை தமிழ் அரசு கட்சியின் உட்கட்சி குழப்பம் வரவர உச்சமடைந்து- தற்போது 4வது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பீற்றர் இளஞ்செழியன், சந்திரகுமார், நடராஜா ஆகியோர் தனித்தனியாக கட்சிக்கு எதிராக 3 வழக்குகளை தாக்கல் செய்துள்ள நிலையில், தற்போது முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகனால் மற்றொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவராக செயற்பட்ட மாவை சேனாதிராசா தனது பதவியை துறப்பதாக எழுதிய கடிதத்தை வலிதற்றதாக அறிவிக்க கோரி- கட்சியின் யாப்பை மீறி மத்தியகுழுவினால் எந்த தீர்மானங்களையும் எடுக்க முடியாது என- இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பீற்றர் இளஞ்செழியன், நடராஜா ஆகியோரின் வழக்குகளில் முன்னிலையாகும் சட்டத்தரணி குருபரனே, சிவமோகன் தரப்பு சட்டத்தரணி.
கட்சியின் தலைவர் தெரிவுக்கு எதிராக திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினால், கட்சியின் பொதுக்குழு முடக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சிவமோகன் தரப்பின் வழக்கு கட்சியின் மத்தியகுழுவை குறிவைத்துள்ளது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டம் வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ளது. கடந்த மத்தியகுழு கூட்டத்தில், மாவை சேனாதிராசா தலைமை பதவியிலிருந்து விலகி விட்டார், அதனால் அவர் தலைமை தாங்க முடியாது என எம்.ஏ.சுமந்திரன் அணியினர் தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த பின்னணியில், மாவை தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக எடுக்கும் முடிவை வலிதற்றதாக கோரி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முதல் பார்வைக்கு- மாவையின் பதவியை நீடிக்க வேண்டுமென்ற ஆசையில், அவர் தரப்பினர் இந்த வழக்கை தாக்கல் செய்ததாக தோன்றலாம். ஆனால், விடயம் அதுவல்ல.
இலங்கை தமிழ் அரசு கட்சி தற்போது சி.சிறிதரன் அணி- எம்.ஏ.சுமந்திரன் அணியென இரண்டு பட்டுள்ளது. சி.சிறிதரன் அணியை, எம்.ஏ.சுமந்திரன் அணியினர் மாத்திரமே இதுவரை வழக்குகள் மூலம் நெருக்கடி கொடுத்து வந்தனர். தற்போது, பதிலுக்கு எம்.ஏ.சுமந்திரன் தரப்பினரையும் வழக்குகள் மூலம் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
கட்சியின் பொதுக்குழு முடக்கப்பட்டுள்ள நிலையில், மத்தியகுழுவின் மூலம் முடிவுகளை எடுத்து வந்த நிலையில்- தற்போது மத்தியகுழுவையும் சவாலுக்கு உட்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
“கட்சியின் தீர்மானங்களை பொதுக்குழுவே மேற்கொள்ள முடியும், மத்திய குழு அல்ல. கட்சியின் சில தலைவர்கள்தான் திருகோணமலையில் வழக்கு தொடர்ந்து பொதுக்குழுவை முடக்கியுள்ளனர். கட்சியின் கொள்கை முடிவுகளை பொதுக்குழுவே மேற்கொள்ள முடியும். ஆனால் சிலரது சுயநலன்களுக்காக யாப்பை மீறி பல விடயங்கள் நடக்கிறது. தேர்தல்களில் யாரை ஆதரிப்பது, வேட்பாளர் நியமனம், தேசியப்பட்டியல் விவகாரங்களை பொதுக்குழுவே மேற்கொள்ள வேண்டும். ஆனால் மத்தியகுழுவை வைத்துக்கொண்டு அவற்றை செய்ய முயன்றார்கள். தலைவர் விவகாரத்தில் அவர்கள் எம்மிடம் சிக்கியுள்ளனர். அதை வைத்து வழக்கு தாக்கல் செய்துள்ளோம்.
யாப்பை மீறி மத்தியகுழுவில் எந்த தீர்மானத்தையும் எடுக்க அனுமதிக்கக்கூடாது என்பதே எமது வழக்கின் நோக்கம்.
தலைவர் பதவியை துறப்பதாக மாவை சேனாதிராசா மத்தியகுழுவுக்கு அறிவிக்கவில்லை. தலைவர் பதவியை பொறுப்பேற்குமாறு சிறிதரனை வலியுறுத்தி ஒரு கடிதம் அனுப்பினார். அதன் பிரதி மட்டுமே பொதுச்செயலாளருக்கு வட்சப் மூலம் அனுப்பப்பட்டது. அதனை வைத்து செயலாளர் எதையும் செய்ய முடியாது.
அந்த கடிதத்தின் பின்னர்தான்- அவரை தலைவரென தேசியப்பட்டியலுக்கு நியமித்தனர். தேர்தல் விஞ்ஞாபனத்தை மாவைதான் தயாரித்தார். அவரின் முன்னால்தான் அதை வெளியிட்டனர். உங்களுக்கு தேவையெனில் அவரை வைத்து காரியமாற்றுவீர்கள்… பின்னர், அவரை நீக்குவீர்களா?
கட்சியின் பொதுக்குழு 2017 இல் கூடிய பின்னர்- மீண்டும் கூட முன்னர் 2020 இல் வந்த சாணக்கியன் பொதுக்குழுவில் உள்ளார். அவர் பொதுக்குழுவிலோ, மத்தியகுழுவிலோ இருக்க முடியாது. அடுத்த முறை அவர் மத்தியகுழுவுக்கு வந்தால் அனுமதிக்க மாட்டோம். அவர் பார்வையளராக அனுமதிக்கப்பட்டார். இப்போதுள்ள எம்.பிகளும் பார்வையாளராக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வாக்களிக்கவோ, கருத்துக்கூறவோ முடியாது“ என சி.சிவமோகன், தமிழ் பக்கத்திடம் தெரிவித்தார்.
28ஆம் திகதி கட்சியின் மத்தியகுழு கூடவுள்ளது. தற்போது வருட இறுதி நீதிமன்ற விடுமுறை. ஜனவரி 7ஆம் திகதியே மீள நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கவுள்ளன. இதனால், நகர்த்தல் பத்திரம் மூலம் அடுத்த ஓரிரு நாட்களில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முயற்சி வெற்றியடைந்தால், கட்சியின் மத்தியகுழுவிலும் இது தொடர்பான முடிவுகளை எடுக்க இடைக்கால தடைவிதிக்கப்படும் சூழலும் உள்ளது.
இப்படியொரு நிலைமை வந்தால்- தற்போது பொதுக்குழுவும் முடங்கியுள்ள நிலையில், மத்தியகுழுவும் முடங்கக்கூடும். தற்போது பொதுக்குழு முடங்கியுள்ள நிலையில், கட்சியின் யாப்பை மீறி மத்தியகுழுவின் ஊடாகவே கட்சி இயங்குகிறது. கட்சியின் யாப்பை சுட்டிக்காட்டியே, பொதுக்குழுவை முடக்கிய வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தற்போது, அதே யாப்பை சுட்டிக்காட்டிய மத்தியகுழுவின் தீர்மானத்துக்கு எதிரான வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இப்போது உண்மையிலேயே தமிழரசு கட்சி நெருக்கடியான கட்டத்தை எட்டியுள்ளது.
இதேவேளை, பொதுக்குழுவை முடக்கிய வழக்கை வாபஸ் பெற்றால், ஏனைய 2 வழக்குகளையும் வாபஸ்பெற வாய்ப்புள்ளதாகவும் தமிழ் பக்கம் அறிகிறது.