2028ஆம் ஆண்டுக்குள் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பை $15.1 பில்லியனாக அதிகரிப்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (18.12.2024) பாராளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி விசேட அறிக்கையொன்றை வழங்கியபோது, இந்த முக்கிய இலக்கை அடைய தனது நிர்வாகம் பல்வேறு துறைகளில் மாற்றங்களை கொண்டுவருவதாக அறிவித்தார்.
” 2028ஆம் ஆண்டு வரை எமது பயணம் நாட்டு மக்களின் நம்பிக்கையுடன் தொடரும் எனவும், 2022ஆம் ஆண்டில் நாடு எதிர்கொண்ட பொருளாதார மோசமான நிலை மீண்டும் ஏற்படாது என்பதில் நான் உறுதியாக உள்ளேன்,” எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும் மற்றும் மூலதன சந்தைகளை மேம்படுத்தவும் அரசாங்கம் முன்னுரிமை வழங்கும் என்றும் கூறியதோடு, இந்தத் தீர்மானங்கள் சர்வதேச ரீதியாக நாட்டின் நிதி நிலையை பன்மடங்காக உயர்த்தும் என்று ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார்.
2022ல், இலங்கை ஒரு கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டது. இதன் விளைவாக அத்தியாவசியப் பொருட்களின் குறைபாடு, பன்னாட்டு கடன்களின் திருப்பித் தர முடியாமை மற்றும் பொருளாதார சரிவு ஏற்பட்டது. அதனை அடுத்து, புதிய நிர்வாகத்தின் கீழ் ஆட்சி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந் நிலைமை மீண்டும் இலங்கையில் ஏற்படாதிருத்தலை கருத்திற்கொண்டு, 2028ஆம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கான திட்டங்களை வலுப்படுத்தப்படுவதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.