2024ஆம் ஆண்டில் வெளிநாடு சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த 13ஆம் திகதி நிலவரப்படி, குறித்த எண்ணிக்கை 300,162 ஆக கணக்கிடப்பட்டுள்ளது.
கடந்த 10 வருட காலப்பகுதியில், 2022ஆம் ஆண்டில் 310,948 பேர் வெளிநாடுகளுக்கு சென்றதை தொடர்ந்து, 3 இலட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்குச் சென்ற இரண்டாவது தடவையாக 2024ம் ஆண்டு பதிவாகியுள்ளது.
2024 ஆம் ஆண்டில், வெளிநாடுகளுக்கு 177,804 ஆண் தொழிலாளர்களும், 122,358 பெண் தொழிலாளர்களும் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளனர். ஆண் தொழிலாளர்:பெண் தொழிலாளர், 60:40.7 என்ற வீதத்தில் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தம் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதில், 184,140 பேர் சொந்தமாகவும், 116, 022 பேர் வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் ஊடாகவும் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.
பெரும்பாலான இலங்கையர்கள் குவைட் நாட்டிற்கும் (73,995), இரண்டாவதாக அதிகளவான இலங்கையர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் (49,499) சென்றுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில், இலங்கையர்கள் தென் கொரியா, இஸ்ரேல், ருமேனியா மற்றும் ஜப்பான் போன்ற, நாடுகளுக்கு வேலைகளுக்குச் செல்வதில் அதிக நாட்டம் காட்டி வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, 2024ஆம் ஆண்டு தென் கொரியாவுக்கு 7,002 இலங்கையர்களும், இஸ்ரேலுக்கு 9,211 பேரும், ருமேனியாவுக்கு 10,274 பேரும், ஜப்பானில் வேலை வாய்ப்புக்காக 8,251 பேரும் வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில், 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள், வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை 311,000ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டு பணியாளர்களிடமிருந்து பெறப்பட்ட அந்நியச் செலாவணியின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளதுடன் இவ்வாண்டு நவம்பர் மாதம் வரையில் 5961.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை பெற்றுள்ளது.