இந்தியாவுக்கு எதிரான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய அணி 445 ரன்கள் குவித்துள்ளது. ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட் ஆகியோர் அபாரமாக விளையாடி சதம் விளாசினர். இந்திய அணியின் சார்பில் பும்ரா 6 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 27 ஓட்டங்களை பெற்றுள்ளது.டி லெரதஉ
இந்திய அணி, அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் 2வது போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. இதையடுத்து தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பனிலுள்ள காபா மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக வெகுவாகப் பாதிக்கப்பட்டது. முதல் நாளில் 13.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து எஞ்சியுள்ள 4 நாட்களிலும் கூடுதலாக அரை மணி நேரம் ஆட்டம் நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. முதல் நாள் ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் நேற்று மழை பெய்யாத நிலையில் 2-ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. உஸ்மான் கவாஜா 19 ரன்களுடனும், நேதன் மெக்ஸ்வீனி 4 ரன்களுடனும் ஆட்டத்தைத் தொடங்கினர்.
ஆனால் இவர்கள் இருவரையும் தனது அபாரமான பந்துவீச்சால் வீழ்த்தினார் பும்ரா. கவாஜா 21 ரன்களும், மெக்ஸ்வீனி 9 ரன்களும் எடுத்து வீழ்ந்தனர். மார்னஸ் லபுஷேன் 55 பந்துகளில் 12 ரன்கள் எடுத்த நிலையில் நித்திஷ் ரெட்டி பந்துவீச்சில் கோலியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். ஆனால், 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்டீவன் ஸ்மித்தும், டிராவிஸ் ஹெட்டும் அபாரமாக விளையாடி இன்னிங்ஸை கட்டமைத்தனர். பும்ரா, சிராஜ், ஆகாஷ் தீப், நித்திஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் பந்துகளை இந்தக் கூட்டணி சிதறடித்தது. ஸ்மித் நிதானமாக விளையாட, மற்றொரு முனையில் டிராவிஸ் ஹெட் அதிரடி காட்டினார்.
அடிலெய்டு போட்டியைப் போலவே இந்தப் போட்டியிலும் ஹெட், அபாரமாக விளையாடி சதமடித்தார். ஹெட் 160 பந்துகளில் 152 ரன்கள் (18 பவுண்டரிகள்) எடுத்தும், ஸ்மித் 190 பந்துகளில் 101 ரன்கள் (12 பவுண்டரிகள்) எடுத்தும் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தனர். 4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 241 ரன்கள் குவித்தது. பின்னர் வந்த மிட்செல் மார்ஷ் 5, பாட் கம்மின்ஸ் 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 2ம் நாள் ஆட்ட நேர இறுதியில் அலெக்ஸ் கேரி 45, மிட்செல் ஸ்டார்க் 7 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர்.
இன்றைய 3வது நாள் ஆட்டத்தில் அவுஸ்திரேலியா 445 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
ஜஸ்பிரீத் பும்ரா 6, முகமது சிராஜ் 2, நித்திஷ் குமார் ரெட்டி, ஆகஸ் தீப் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
பதிலளித்து ஆடி வரும் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 27 ஓட்டங்களை பெற்றுள்ளது.
தலைவலியான ஹெட்: இந்தப் போட்டியில் 152 ரன்களைக் குவித்த டிராவிஸ் ஹெட்டுக்கு, டெஸ்ட் போட்டிகளில் 9வது சதமாக இது அமைந்தது. மேலும் அடுத்தடுத்த போட்டிகளில் சதம் எடுத்து இந்திய அணி வீரர்களை சோதனைக்குள்ளாக்கியுள்ளார் ஹெட். அடிலெய்டில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியிலும் ஹெட் சதம் விளாசியிருந்தார்.மேலும், கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் இந்திய அணிக்கெதிராக சதங்களை விளாசி இந்திய அணிக்கு தலைவலியான வீரராகவும் மாறி வருகிறார் ஹெட். இதுகுறித்து ஹெட் கூறும்போது, “நாங்கள் இந்தியாவுக்கு எதிராக அதிக முறை விளையாடுகிறோம். அவர்களுடைய பந்துவீச்சை நான் அடிக்கடி பார்த்து வருகிறேன். அவர்களது பந்துவீச்சை கூர்மையாக கவனிக்கிறேன். இந்திய அணியினர் எப்போதும் கடும் சவால்களை அளிக்கும் அணியாக இருக்கின்றனர். அடிலெய்டு மற்றும் பெர்த்தில் நான் நன்றாகத்தான் விளையாடினேன் என நினைக்கிறேன். நான் எப்போதுமே, என்னுடைய அணியின் வெற்றிக்காகத்தான் விளையாடுவேன். அணிக்கு என்ன தேவையோ அதைத்தான் நான் செய்கிறேன்” என்றார்.
கபில்தேவின் சாதனையை முறியடித்த பும்ரா: பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய வீரர் பும்ரா 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதன்மூலம் அவர் முன்னாள் கப்டன் கபில்தேவின் சாதனையை முறியடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் கபில்தேவ் 9 முறை 5 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். தற்போது பும்ரா, 10 முறை 5 விக்கெட்களை வீழ்த்தி கபிலின் சாதனையை முறியடித்துள்ளார். டிராவிஸ் ஹெட், ஸ்மித், உஸ்மான் கவாஜா, நேதன் மெக்ஸ்வீனி, மிட்செல் மார்ஷ் ஆகியோரின் விக்கெட்களை பும்ரா கைப்பற்றினார். அதுமட்டுமல்லாமல் இந்த ஆண்டில்சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட்களைச் சாய்த்தவர்கள் வரிசையில் பும்ரா முதலிடத்தில் உள்ளார். அவர் 20 போட்டிகளில் விளையாடி 73 விக்கெட்களைச் சாய்த்துள்ளார்.
ஸ்மித் 33வது சதம்: இந்தப் போட்டியில் ஸ்மித் 101 ரன்கள் விளாசினார். இது டெஸ்ட் போட்டிகளில் இவரது 33வது சதமாக அமைந்தது. மேலும் 25 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு அவர் சதத்தை விளாசியுள்ளார். அதேபோல் போர்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் ஸ்மித் 9 சதங்களை விளாசி சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோரது வரிசையில் இணைந்துள்ளார். சச்சின், விராட் கோலி ஆகியோரும் போர்டர்-கவாஸ்கர் தொடரில் 9 சதங்களை விளாசியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் இந்த போர்டர்-கவாஸ்கர் தொடரில் 2 ஆயிரம் ரன்கள்குவித்த 8வது வீரர் என்ற பெருமையையும் ஸ்மித் பெற்றுள்ளார். அவர் 21 போட்டிகளில் விளையாடி 2,007 ரன்களை எடுத்துள்ளார்.