திருகோணமலையின் புகழ் பூத்த ஆலயமாகிய சல்லி அம்பாள் ஆலயத்தின் ஆலய வளவினுள் காணப்படுகின்ற வெள்ளை கருங்கல் மலையை தனி நபர் ஒருவர் உரிமை கோரி ஆக்கிரமிக்க முயற்சிப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
சல்லியம்மாள் ஆலயத்திற்கு அண்மையில் காணப்படுகின்ற வெள்ளை கருங்கல் மலையை தன்னுடைய காணி எனக் கோரி தனி நபர் ஒருவர் கடந்த சில நாட்களாக ஆக்கிரமிப்பதற்கும் முயற்சித்து வருகின்றார். ஜேசிபி எந்திரத்தை பயன்படுத்தி மலையை உடைக்க முற்பட்டபோது கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஜேசிபி இயந்திரத்தை தாக்கியுள்ளனர். இதன் அடிப்படையில் ஆக்கிரமிப்பாளரால் வழங்கப்பட்ட வழக்கு விளக்கம் கோரி உப்புவெளி பொலிஸாரால் கிராம இளைஞர்கள் சிலரை பொலிஸ் நிலையத்திற்கு வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிராம மக்கள் அனைவரும் உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒன்று கூடியதுடன், இவ்விடயத்திற்கு தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதன் காரணமாக உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் இன்று (15.12.2024) காலை பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
300க்கும் அதிகமான மக்கள் பொலிஸ் நிலையத்தில் ஒன்று கூடியதுடன், சட்ட முரணான விதத்தில் இந்த ஆக்கிரமிப்பு இடம் பெறுவதற்கும், பொலிஸார் ஒத்துழைப்பு வழங்குவதற்கும் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் கடற்கரையுடன் காணப்படும் குறித்த மலையை உடைக்கும் பொழுது கடல் நீர் கிராமங்களுக்குள் உட்புகும் சந்தர்ப்பம் ஏற்படுவதுடன், இயற்கை பாதிப்புகளும் ஏற்படும் என மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.