இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டம் பெரும் வாய்த்தர்க்கத்துடன்- முடிவுகள் எதுவும் எடுக்கப்படாமல்- முடிவுக்கு வந்துள்ளது.
இன்று (14) வவுனியாவில் கட்சியின் மத்தியகுழு கூட்டம் நடந்தது.
காலை 10 மணிக்கு ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த போதும், சுமார் 30 நிமிடங்கள் தாமதமாகவே கூட்டம் ஆரம்பித்தது. மாவை சேனாதிராசா வர தாமதமானதால் கூட்டம் ஆரம்பிக்க தாமதித்தது. அவர் வரும்வரை தாமதிக்கமல், கூட்டத்தை ஆரம்பிக்குமாறு ஒரு தரப்பு தர்க்கத்தில் ஈடுபட்டது. அனேகமாக சுமந்திரன் அணியினர் என வகைப்படுத்தப்படுபவர்களே இவ்வாறு வற்புறுத்தினர்.
இதையடுத்து, கூட்டம் ஆரம்பித்தது. கூட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே மாவை சேனாதிராசா கூட்ட அரங்கிற்குள் நுழைந்தார்.
கூட்டத்தின் தலைவர்கள் அமரும் பகுதியில் 4 கதிரைகள் இடப்பட்டிருந்தன. செயலாளர், நிர்வாக செயலாளர், சிரேஸ்ட உபதலைவர் ஆகியோர் உட்கார்ந்திருந்தனர். சிரேஸ்ட உபதலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் கூட்டம் ஆரம்பித்தது. மாவை சேனாதிராசா அரங்கிற்குள் நுழைந்ததும், தலைவர் ஆசனத்திலிருந்து விலகி அருகிலிருந்த ஆசனத்தில் அவர் அமர்ந்து விட்டார்.
கூட்டத்தின் தலைவர்கள் பகுதியை நோக்கி மாவை சேனாதிராசா சென்ற போது, மட்டக்களப்பு எம்.பி சாணக்கியன், மாவை தலைவர் பதவியிலிருந்து விலகி விட்டதால், பிரமுகர் பகுதியில் அமர்வது முறையல்ல, சாதாரண உறுப்பினரை போல அமருமாறு கூறினார்.
ஆனால், மாவை அதை பொருட்படுத்தாமல் தலைவர் ஆசனத்தில் அமர்ந்தார்.
எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன், கி.துரைராசசிங்கம் போன்றவர்கள் மாவை சேனாதிராசா தலைவர் பொறுப்பிலிருந்து விலகி விட்டதால், அவர் மீள தலைவராக செயற்பட முடியாது என தர்க்கப்பட்டனர்.
முன்னதாக- கடந்த பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் மாவை சேனாதிராசா, கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கடிதம் அனுப்பியிருந்தார். அதை தொடர்ந்து, அவர் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகி விட்டாரா என உறுதி செய்ய, செயலாளர் கடிதமொன்றை அனுப்பியிருந்தார். பின்னர், கட்சியின் செயலாளருக்கு மாவை அனுப்பிய கடிதத்தில்- பதவியை துறப்பதாக அறிவித்த முடிவை மீளப்பெறுவதாகவும், கட்சியின் தலைவராக தொடர்வதாகவும் அறிவித்திருந்தார்.
இந்த பின்னணியில், இன்றைய கூட்டத்தில்- மாவை சேனாதிராசா தலைவராக தொடர முடியாது, அவர் பதவிவிலகுவதாக அறிவித்த பின்னர் அதை மீளப்பெற முடியாது என ஒரு தரப்பு வற்புறுத்தியது.
மறுபுறம்- சி.சிறிதரன் அணி என வகைப்படுத்தக்கூடிய தரப்பினர்- மாவை சேனாதிராசா தலைவராக தொடரலாம் என தர்க்கப்பட்டனர். சி.சிறிதரன், ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன் உள்ளிட்டவர்கள் இதை வலியுறுத்தினர்.
கட்சி தலைமை தொடர்பான வழக்கு தீர்க்கப்பட்டு, புதிய தலைவர் தெரிவாகும் வரை, தானே தலைவராக தொடர விரும்புவதாகவும், புதிய தலைவரிடம் சுமுகமாக கட்சியை ஒப்படைப்பதாகவும் மாவை தெரிவித்தார்.
கட்சியின் தலைவராக மாவை செயற்படலாமா இல்லையா என்பது குறித்து எந்த முடிவும் எடுக்க முடியமால்- மாலை 3.30 மணி வரை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழுவில் மோதல் நடந்தது.
இறுதியில் எந்த முடிவும் இல்லாமல் கூட்டம் நிறைவடைந்தது.
மீளவும் 2 வாரங்களுக்குள் கூடி- தலைவர் பிரச்சினை, கட்சிக்கு எதிராக கடந்த தேர்தல்களில் செயற்பட்டவர்கள் மீதான ஒழுக்காற்று விவகாரங்களை ஆராய்வதென முடிவாகியுள்ளது.