சுமார் 75 வருடங்களுக்கு அதிகமாக பாரம்பரிய மீன்பிடியில் ஈடுபட்டு வந்த மீனவர்களின் திருகோணமலை உட்துறைமுகப் பகுதியின் பழைய ஜெட்டியை ஆக்கிரமித்து அங்கு உணவகத்தை கட்டிய முந்தைய கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்ததாக மீனவ சமுதாயம் குற்றம் சாட்டியது அனைவரும் அறிந்த விடயம். இதன் மூலம், அந்த இடத்திற்குள் செல்வதற்கும், இலகுவாக மீன்பிடிப்பதற்கும் மீனவர்களுக்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டன. இலங்கையின் அரசியலமைப்பின் 12வது உறுப்புரை ஊடாக உறுதி செய்யப்படும் “பொது இடங்களுக்குள் செல்வதில் பாகுபாடு இல்லாமை” தொடர்பான அடிப்படை உரிமை அப்பகுதி மீனவர்களுக்கு இழக்க செய்யப்பட்டது.
செந்தில் தொண்டமான் ஆளுநராக இருக்கும் போது, இந்த ஜெட்டி பகுதியை ஆக்கிரமிக்க அரசாங்கத்தின் ஒப்புதலோ, சுற்றுச்சூழல் அனுமதிகளோ பெறப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மீனவ சமுதாயம் இதை எதிர்த்து பலமுறை புகார் அளித்தும், எந்தவித விசாரணையும் நடந்ததாக தெரியவில்லை. செந்தில் தொண்டமான் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் இதனால் மேலும் தீவிரமடைந்திருந்தன.
இதற்கிடையில், இச்சிக்கலைத் தொடர்ந்து மீனவர்களின் உரிமையை பாதுகாக்க, அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத அருண் ஹேமச்சந்திரா குரல் கொடுத்தார். அவருடைய முயற்சிகள் மீனவர்களிடையே ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தின. குறிப்பாக, தேர்தலுக்கு முந்தைய காலங்களில் அவர் இந்த பிரச்சனையை கவனத்தில் எடுத்தமை, அவருடைய அரசியல் நடவடிக்கைகளுக்கு பலத்தை சேர்த்தது.
ஆனால், அருண் ஹேமச்சந்திரா தற்போது ஆளும் கட்சியில் பிரதி அமைச்சர் பொறுப்பில் இருக்கும்போதும், பழைய ஜெட்டி மீனவர்களுக்கு மீண்டும் வழங்கப்படவில்லை. ஜெட்டி மீதான ஆக்கிரமிப்பு தொடர்கிறது, மேலும் இது தொடர்பான எந்த அதிகாரப்பூர்வ விசாரணைகளும் தொடங்கப்படவில்லை என்பதும் கவலைக்குரியது.
இதன் மூலம், முந்தைய ஆளுநர்களின் அதிகாரத் துஷ்பிரயோகங்களுக்கும், தற்போதைய ஆட்சியாளர்களின் செயலற்ற மௌனத்திற்கும் நெறிமுறை இல்லை என்பதை மீனவ சமுதாயம் உணருகிறது. குறிப்பாக, ஆளுநர் பதவியில் உள்ளவர்களுக்கு சட்டரீதியான பொறுப்புமுறைகள் குறைவாகவே உள்ளன. இந்த தகுதிவிலக்கான சூழ்நிலைகள் பல ஊழல் நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கின்றன. இருப்பினும் இவ்விடயம் தொடர்பான ஊழலை நிரூபிக்க போதிய அளவு ஆதாரத்தை தம் வசம் கொண்டிருப்பதாக வெளிப்படுத்திய அருண் ஹேமசந்திரா, குறித்த விடயத்தில் தொடர்புடைய அரச அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் கூட இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கேள்வி எழுப்பி உள்ளது.
முன்னால் ஆளுநர் செந்தில் தொண்டமான் தொடர்பான ஊழல் விசாரணைகள் தொடங்கப்பட வேண்டும் என்று மீனவ சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும், எந்தவிதமான ஆவலான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இதன் மூலம், அருண் ஹேமச்சந்திரா அதிகாரத்துடன் முந்தைய போராட்டங்களை மக்களின் பக்கம் நின்று தொடர்வார் என்ற எதிர்பார்ப்பு நொறுங்கியுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் குறித்த பகுதியில் நீண்ட காலமாக மீன்பிடியில் ஈடுபடுகின்ற மீனவர் ஒருவர் கருத்து தெரிவிக்கும் பொழுது, குறித்த பகுதி இன்னும் திறக்கப்படாமையினால், தாங்கள் தங்களுடைய சைக்கிள்களை வீதி ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு, அருகிலுள்ள கட்டுப்பகுதியில் இறங்கி மீன்பிடியில் ஈடுபடுவதாக குறிப்பிட்டார். அத்துடன் குறித்த ஜெட்டி பகுதிக்குள் உள் நுழைவதை தடுத்துள்ள சுவற்றை அகற்றி வழமை போல் மக்கள் பாரம்பரியமான இடத்தை சென்று பாரவிடுவதற்கும், இயற்கை அழகை ரசிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். ஏன் இன்னும் ஜெட்டி திறக்கப்படவில்லை என்ற கேள்வியையும் முன்வைத்தார்.
மக்கள் வாக்கால் பதவி அடைந்தவர் மக்களின் உரிமைகளுக்காக செயல்பட வேண்டும் என்பதற்கு அருண் ஹேமச்சந்திரா இன்று உயிர்த்துவிரோதமாக இருக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் பாதுகாக்கும் வழிகளை அரசு அமுல்படுத்தவில்லை என்றால், நம்பிக்கையின் அழிவு மட்டுமின்றி, அரசின் மீது மக்களின் அசட்டுத் தன்மையும் மேலும் அதிகரிக்கும்.
முடிவாக, இந்த ஜெட்டி பிரச்சனை என்பது கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் அதிகாரம் மற்றும் அரசியல் சீர்கேட்டின் ஓர் வெளிப்பாடு. மீனவர்களின் உரிமையை பாதுகாக்கும் அரசின் உரிய நடவடிக்கைகள் எப்போது எனும் கேள்வி இன்னும் நிலவுகிறது.
ஆரணியன்