எதிர்காலத்தில் ஒரே கூட்டணியில் இணைந்து செயற்படுவது குறித்து இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் பேச்சு நடத்தி வருகிறார்கள்.
இது தொடர்பான சந்திப்பு சி.சிறிதரனின் இல்லத்தில் நடந்தது.
ஏற்கெனவே ஒருமுறை தொலைபேசியில் சி.சிறிதரனும், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் பேசியிருந்தனர். இதன் தொடர்ச்சியாக, சி.சிறிதரனின் இல்லத்துக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சென்று பேச்சில் ஈடுபட்டார்.
இந்த சந்திப்புக்கள் தொடர்பில் சி.சிறிதரன் தரப்பினரை தமிழ் பக்கம் தொடர்பு கொண்ட போது, பேச்சின் விபரங்களை வெளிப்படுத்தினர்.
“எதிர்காலத்தில் ஒரே கட்டமைப்பாக- கூட்டணியாக- தேர்தலை சந்திப்பதற்கான தொடர் பேச்சின் முதற்கட்டமே தற்போது நடந்து வருகிறது. க.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சராக செயற்பட்ட போது- தமிழ் மக்கள் பேரவையினரால் முன்வைக்கப்பட்ட தீர்வு யோசனையின் அடிப்படையில் செயற்பட இணக்கம் தெரிவித்தால், இணைந்து செயற்படலாம் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
எனினும், கோட்டாபயவின் ஆட்சிக்காலத்தில் இனப்பிரச்சினை தீர்வு விவகாரத்தில் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவிடம், தமிழ் தேசிய கூட்டமைப்பாக சமர்ப்பிக்கப்பட்ட வரைபை கஜேந்திரகுமாரிடம், சிறிதரன் சமர்ப்பித்தார். அந்த வரைபை ஆராய்ந்த பின் தொடர்ந்து பேசுவதாக கஜேந்திரகுமார் தெரிவித்தார்.
இந்த கூட்டணி பேச்சில் உள்ள நடைமுறை சிக்கல்களையும் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு யோசனையின் அடிப்படையில் செயற்பட தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை, ஆனால், இலங்கை தமிழ் அரசு கட்சி, சமஸ்டியை அடிப்படையாக கொண்ட கட்சி. தீர்வு வரைபில் சமஸ்டி என குறிப்பிடாமல் இருந்தால் கட்சியின் ஆதவை பெற முடியாது, கட்சியின் அரசியல் மற்றும் மத்தியகுழுக்களில் தனக்கு ஆதரவு குறைவாக உள்ளதாக சிறிதரன் தெரிவித்துள்ளார்“ என குறிப்பிட்டனர்.
இதேவேளை, இரு தரப்பும் ஒரு கூட்டணியாக செயற்படுவதெனில் அதன் தலைவராக கஜேந்திரகுமார் பொன்னம்பலமே செயற்பட வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணி தரப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழ் பக்கம் அறிந்தது.