தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் வட்டம், சின்னமனையைச் சேர்ந்த முத்து என்பவரின் மகள் ரமணி (26). இவர் மல்லிப்பட்டிணம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்து பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், சின்னமனையைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் மதன் (30). இவருக்கு அவரது பெற்றோர்கள் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, மதன் குடும்பத்தினர், ரமணியை பெண் கேட்டு அவரது வீட்டிற்குச் சென்றனர். ஆனால், மதனைப் பிடிக்கவில்லை என ரமணி கூறியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மதன், இன்று காலை ரமணி பணியாற்றி வந்த பள்ளிக்கு சென்றார்.
ரமணி 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பில் பாடம் எடுத்து கொண்டு இருந்துள்ளார். அப்போது வகுப்புக்குள் சென்ற மதன்குமார் `என்னை திருமணம் செய்து கொள்ள முடியாதுனு சொல்லிட்டீயா?’னு கேட்டுள்ளார். `உன்னை யார் க்ளாஸ்க்கு வர சொன்னது?’னு ரமணி கேட்டதாக தெரிகிறது. அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் மதன்குமார், ரமணியின் கழுத்தும் வயிறு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தினார். அப்படியே சரிந்து விழுந்தார் ரமணி.
மாணவர்கள் அலறி அடித்து வகுப்பறையை விட்டு வெளியில் ஓடி வருவதையறிந்த மற்ற ஆசிரியர்கள், அந்த வகுப்பறைக்குள் சென்று பார்த்த போது ரத்த வெள்ளத்தில் ரமணி கிடந்தார்.
இதையடுத்து, அவர்கள், ரமணியை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சேதுபாவசத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தப்பியோடிய மதனை போலீஸார் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.