மன்னார், விடத்தல்த்தீவு இலங்கை இராணுவ ஆட்சேர்ப்பு பயிற்சிப் பாடசாலையில் பயிற்சி பெற்று வரும் பயிற்சிப் படையினருக்கு காய்ச்சல் பரவியுள்ளதன் காரணமாக, அதன் பயிற்சிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு வைத்திய அதிகாரியின் மேற்பார்வையில் முகாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தின் ஊடகப் பிரிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த நவம்பர் 11ஆம் திகதி முதல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆட்சேர்ப்பு சிப்பாய்களுக்கு காய்ச்சல் அறிகுறி காரணமாக சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், தற்போது 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் ஒருவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமையால், அவர் மேலதிக சிகிச்சைக்காக அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு நிறுவகத்திற்கு (IDH) மாற்றப்பட்டு மேலதிக சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
காய்ச்சல் பரவுவது தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.