நடிகர் தனுஷ் போலி முகமூடி அணிந்து வலம் வருகிறார் என்று நடிகை நயன்தாரா பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சினிமா பின்புலம் எதுவுமில்லாமல் திரைத்துறைக்கு வந்து, கடின உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும் இன்றைய நிலையை அடைந்திருக்கிறேன். நெட்பிளிக்ஸில் வெளியாக இருக்கும் ‘நயன்தாரா பியாண்ட் த ஃபேரி டேல்’ ஆவணப்படத்தை என்னைப் போலவே ஏராளமான எனது ரசிகர்களும், நலவிரும்பிகளும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். உங்களது தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கைகளால் நானும், எனது கணவரும் மட்டுமின்றி ஆவணப்பட பணிகளில் பங்காற்றிய ஒவ்வொருவரும் பாதிப்படைந்திருக்கிறோம். காதல், திருமணம் உள்ளிட்ட எனது வாழ்வின் மகிழ்வான தருணங்கள் இடம்பெற்றுள்ள இந்த ஆவணப்படத்தில், என் வாழ்வின் மகத்துவமான காதலை கண்டடைந்த ‘நானும் ரவுடிதான்’ திரைப்படம் இல்லாததன் வலி மிகவும் கொடுமையானது.
இந்த ஆவணப்படத்தில் ‘நானும் ரவுடிதான்’ படத்தின் காட்சிகளையும், பாடல்களையும், புகைப்படங்களையும் பயன்படுத்தும் வகையில், உங்களிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறுவதற்காக 2 வருடங்களாகக் காத்திருந்தோம். எங்கள் எல்லாப் போராட்டங்களும் பலனளிக்காத நிலையில், அந்த முடிவையே கைவிட்டு, ஆவணப்படத்தில் திருத்தங்கள் செய்தோம். அந்தப் படத்தின் பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுவதற்கு முக்கியமான காரணம், அதன் வரிகள். அதைக் கூட பயன்படுத்தக் கூடாது என்பது எந்த அளவுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும் என்பது உங்களைத் தவிர மற்ற அனைவருக்கும் புரியும். என்மீதான தனிப்பட்ட வெறுப்பால் மட்டுமேயான, உங்களது இந்த நடவடிக்கைகளை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?.
சமீபத்தில் வெளியான டிரைலரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 3 விநாடி வீடியோவுக்கு ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருப்பது விநோதமானதாக இருக்கிறது. கீழ்தரமான இந்த செயல், ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மேடைகளில் உங்கள் அப்பாவி ரசிகர்கள் முன் பேசுவதை போல், ஒரு சதவீதம் கூட உங்களால் நடந்துகொள்ள முடியாது என்பதை நானும், எனது கணவரும் நன்றாகவே அறிந்திருக்கிறோம்.
சட்டப்பூர்வமான உங்கள் நடவடிக்கைகளை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறோம். ‘நானும் ரவுடிதான்’ வெளியாகி 10 ஆண்டுகளை கடந்த பின்பும், உங்களது இழிவான செயல்களை மறைக்கும் வகையிலான போலியான முகமூடியை அணிந்துகொண்டு உங்களால் வலம் வர முடியும். ஆனால், தயாரிப்பாளராக பெரும் வெற்றியைக் கொடுத்த, ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படும் ஒரு திரைப்படத்துக்கு எதிரான உங்களது கொடும் சொற்களை என்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது. அதனால், ஏற்பட்ட காயமும் என்றென்றும் ஆறாது. எந்த ஒரு துறையிலும் வியாபார ரீதியான போட்டிகள் தவிர்க்க முடியாதவை. ஆனால், எக்காரணத்தைக் கொண்டும் ஒருவர் இன்னொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட முடியாது. அநாகரிகமான அந்த செயல்களைச் செய்வது உங்களைப் போன்ற பிரபலமான நடிகரே ஆனாலும், தமிழ்நாட்டு மக்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இந்த உலகம் எல்லோருக்குமானது. கடின உழைப்பால், கடவுளின் ஆசீர்வாதத்தால், மக்களின் பேரன்பால், சினிமாவில் எந்தப் பின்புலமும் இல்லாத ஒருவரும் இங்கு வெற்றி பெறுவதும், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வதும் உங்களை எந்தவிதத்திலும் பாதிக்காது. அடுத்த இசை வெளியீட்டு விழாவில், இது எதுவுமே நடக்கவில்லை என மறுத்து கற்பனையாக சில கதைகளைப் புனைந்து, அதையே உண்மையைப் போல் நீங்கள் சொல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால், அதைக் கடவுள் பார்த்துக் கொண்டிருப்பார் என்பதை மறந்து விடாதீர்கள்.
கொண்ட்டாட்டங்கள் நிறைந்த இந்த வாழ்வை எல்லோரும் புன்னகையோடு கடக்க வேண்டும் என்பதையே எனது குறிக்கோளாகக் கொண்டிருக்கிறேன். அதனை அடிப்படையாகக் கொண்டே எனது ஆவணப்படமும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதனை ஒருமுறை பார்த்தால், உங்கள் எண்ணங்களும் நேர்மறையாக நிச்சயம் மாறும். எல்லா மேடைகளிலும் நீங்கள் சொல்லும் அன்பைப் பரப்புங்கள் என்பதை, வெற்று வார்த்தைகளாய் மட்டுமின்றி, ஒரே ஒரு முறையாவது வாழ்க்கையிலும் கடைப்பிடிக்க வேண்டும் என இனி நானும் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.