Pagetamil
இந்தியா

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு: நடிகை கஸ்தூரிக்கு நவ.29 வரை நீதிமன்றக் காவல்

தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி, இன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார். விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கஸ்தூரியை நவ.29 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இதனையடுத்து நீதிமன்றத்தில் இருந்து அவர் போலீஸ் வாகனத்தில் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். போலீஸ் வேனில் ஏறும் முன்னர் அங்கே குழுமியிருந்த ஊடகவியலாளர்களைப் பார்த்து, “அரசியல் அராஜகம் ஒழியட்டும். நீதி வெல்லட்டும்.” என்று கஸ்தூரி கோஷமிட்டார்.

இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் நடிகை கஸ்தூரி கலந்துகொண்டு பேசும்போது, தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார். அவரது இந்த பேச்சுக்கு தெலுங்கு பேசும் மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும், பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து கஸ்தூரி பேட்டி அளித்தார். அதேநேரத்தில் கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை, மதுரை உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் அடுத்தடுத்து 6 புகார்கள் அளிக்கப்பட்டன.

அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பில் சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், நடிகை கஸ்தூரி மீது 4 சட்ட பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற சம்மனை வழங்குவதற்கு போயஸ் கார்டனில் உள்ள கஸ்தூரி வீட்டுக்கு போலீஸார் சென்றனர். அப்போது அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. அவர் தலைமறைவாகி விட்டதாக செய்திகள் வந்தன. இதனிடையே, முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் கஸ்தூரி மனு தாக்கல் செய்தார்.

இதன் தொடர்ச்சியாக, தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரியை சனிக்கிழமை ஹைதராபாத்தில் போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து, நடிகை கஸ்தூரி சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார். தயாரிப்பாளர் ஒருவர் வீட்டில் இருந்த அவரை கைது செய்த போலீஸார் சாலை மார்க்கமாக சென்னை அழைத்து வந்தனர். மேலும், அவருக்கு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டது. விசாரணை முடிக்கப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட அவரை நவ.29 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இதையும் படியுங்கள்

மும்பை தாக்குதல் தீவிரவாதி ராணாவை இந்தியாவிடம் ஒப்படைத்தது அமெரிக்கா: சிறப்பு விமானத்தில் இன்று அழைத்து வரப்படுகிறார்

Pagetamil

தண்​டவாளத்​தில் படுத்து ரீல்ஸ் எடுத்​தவர் கைது

Pagetamil

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார்

Pagetamil

10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல் ‘சட்டவிரோதமானது’ – உச்ச நீதிமன்றம்

Pagetamil

பிக்பாஸ் தர்ஷன் கைது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!