இலங்கையின் அரசியல் வரலாற்றில் இதுவரையில் ஏற்படுத்தப்படாத பல தேர்தல் சாதனைகளுடன், இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில் 6,863,186 வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலத்துடன் தேசிய மக்கள் சக்தி வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி 61.56 வீதத்தில் வெற்றி பெற்று 141 தொகுதிரீதியான வெற்றியாளர்களுடன் தேசிய பட்டியலில் 18 ஆசனங்களையும் பெற்று, 159 ஆசனங்களை பெற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தி இவ்வருடம் பல சாதனைகளை படைத்து இந்த வெற்றியை தனதாக்கிக்கொண்டதுடன், தேசிய மக்கள் சக்தி தனிக்கட்சியாக பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொண்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி இம்முறை பெற்றுள்ள வாக்கு வீதம், இதுவரை பொதுத் தேர்தலில் கட்சியொன்று பெற்ற வாக்குகளில் அதிகூடிய சதவீத வாக்குகளாகும். இதற்கு முன்னர் 2010ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 60.33 வீதத்தைப் பெற்றிருந்தது.
அத்துடன், தேசிய மக்கள் சக்தி ஒரு பொதுத் தேர்தலில் அதிகூடிய தொகுதி ரீதியான வெற்றியாளர்களை பெற்றுள்ளது. முன்னதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 2010ஆம் ஆண்டு 136 ஆசனங்களைப் பெற்றிருந்தது.
மேலும், இந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி நாட்டிலுள்ள 22 தேர்தல் மாவட்டங்களில், 21 தேர்தல் மாவட்டங்களில் வென்றுள்ளது. இதற்கு முன்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் 19 மாவட்டங்களில் வென்றதே சாதனையாக இருந்தது.
மேலும், ஒரு பொதுத் தேர்தலில் பெற்ற அதிகபட்ச வாக்குகள் தேசிய மக்கள் சக்தி பெற்ற 6,863,186 வாக்குகள் ஆகும். இதற்கு முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2020 இல் 6853960 வாக்குகளைப் பெற்றிருந்ததே சாதனையாகும்.
மேலும், மாவட்ட அளவில் அதிக ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது. இந்த ஆண்டு தேசிய மக்கள் சக்தி மாவட்ட அளவில் 141 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. இதற்கு முன்னர் 2020 இல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 128 ஆசனங்களைப் பெற்று சாதனை படைத்திருந்தது.
மேலும், பொதுத் தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெற்ற கட்சியாகவும் தேசிய மக்கள் சக்தி மாறியுள்ளது. அவர்கள்159 ஆசனங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைப் பெற்றிருந்தது.
மேலும், விகிதாச்சார முறையின் கீழ், 225 பாராளுமன்ற ஆசனங்களில் 2/3 ஆசனங்களை தனிக்கட்சி கைப்பற்றியிருப்பது இதுவே முதல்முறை, தேசிய மக்கள் சக்தி இம்முறையும் அந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
அத்துடன் இலங்கை வரலாற்றில் 3 வீத வாக்கு வீதத்தில் இருந்து பல சாதனைகளை படைத்து பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற கட்சி தேசிய மக்கள் சக்தியாகும்.
இந்த வருட பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி 1,968,716 வாக்குகளைப் பெற்று தேசியப் பட்டியலில் 5 ஆசனங்களுடன் மொத்தம் 40 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி பெற்ற மொத்த வாக்குகள் 17.66 சதவீதமாகும்.
மேலும் இளங்கே தமிழ் அரசு கட்சி 257,813 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடங்களைப் பெற்றுள்ளது. தேசியப்பட்டியல் ஆசனம் உட்பட 8 ஆசனங்களை அக்கட்சி கைப்பற்றியுள்ளது.
புதிய ஜனநாயகக் கட்சி பெற்றுள்ள வாக்குகளின் எண்ணிக்கை 500,835. இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்களையும் சேர்த்து 5 ஆசனங்கள் பெற்றுள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 350,429 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது, அதில் ஒன்று தேசியப்பட்டியல் ஆசனமாகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 87,038 வாக்குகளைப் பெற்று மூன்று ஆசனங்களைப் பெற்றுள்ளதுடன், அதில் ஒன்று தேசியப்பட்டியலில் இருந்து பெறப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அதிகாரம் 178,008 வாக்குகளைப் பெற்று ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்தைப் பெற்றுள்ளது,
ஐக்கிய தேசியக் கட்சியும் 66,234 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தைப் பெற்றுள்ளது. மேலும், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு 66,382 வாக்குகளும், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் 39,894 வாக்குகளும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 33,911 வாக்குகளும், யாழ்ப்பாண சுயேச்சைக் குழு 17 – 27,855 வாக்குகளும் பெற்றுள்ளன.
இந்த பொதுத் தேர்தலில், பதிவு செய்யப்பட்ட 17,140,354 வாக்காளர்களில் 11,815,246 பேர் வாக்களித்துள்ளனர், இது பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 68.93 சதவீதமாகும்.
இவற்றில் 667,240 வாக்குகள்நிராகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி இந்த தேர்தலில் செல்லுபடியாகும் வாக்குகளின் எண்ணிக்கை 11,148,006 ஆகும்.