25.2 C
Jaffna
January 14, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

குற்றப்பின்னணியுடையவர் ரெலோவின் யாழ் வேட்பாளர்; தமிழர்கள் அவரை விரட்ட வேண்டும்: ரெலோவின் பிரமுகர் விந்தன் ‘பகீர்’ தகவல்கள்!

சிவாஜிலிங்கத்துக்கும் ஶ்ரீகாந்தாவுக்கும் உள்ள அர்ப்பணிப்பு, தியாகம் என்பன செல்வம் அடைக்கலநாதனுக்கு கால் தூசு அளவுக்கு கூடவில்லை என அக்கட்சியின் நிர்வாகச் செயலாளரும் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான விந்தன் கனகரட்னம் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த மாதம் 2ம் திகதி திருகோணமலையில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைச் செயலகத்தில் கட்சியின் தலைமை குழு கூட்டம் நடைபெற்றது. கட்சித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த அமைப்பாளர்கள், பிரதிநிதிகள் என 35 பேர் கலந்துகொண்டு பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.

இதன் போது கடந்த பாராளுமன்ற தேர்தலில் யாழ் மாவட்டத்தில் ரெலோ சார்பில் போட்டியிட்டு படுதோல்வியடைந்த குற்றப்பின்னணி கொண்ட ஒருவரை நியமிக்கவேண்டாம் என வலியுறுத்தியிருந்தேன்.

இதேவேளை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் எனது பெயரை முன்மொழியப்பட்டது.
இறுதியாக கட்சி சார்பில் எனது பெயர் நீக்கப்பட்டு இன்னொருவருடைய பெயர் புகுத்தப்பட்டது.

கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் குருசாமி சுரேந்திரனும் இணைந்து திட்டமிட்டு எனது பெயரை நீக்கியுள்ளனர். கடந்த மாகாண சபை தேர்தலில் எனக்கு வழங்க கட்சி தீர்மானித்த வேண்டிய அமைச்சுப் பதவியை வழங்காமல் தனது மைத்துனருக்கு வழங்கினார். அவர் மாகாண சபை காலத்தில் பல மோசடிகளில் ஈடுபட்டார்.

கட்சித் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் சுரேன் குருசாமியும் கட்சிக்கு தெரியாமல் வன்னி மக்களுக்கு தெரியாமல் அந்த மண்ணில் 75,000 ஏக்கர் நிலப்பரப்பை அரசோடு இணைந்து கபளீகரம் செய்து நயினாமடு சீனித் தொழிற்சாலையை நிறுவவும் சிங்கள குடியேற்றத்தை அமைக்கவும் திட்டமிட்டனர். இதனால் எமது கட்சியின் பெயர் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளானது.

தமிழீழ விடுதலை இயக்கம் இன்று மூன்றாக பிரிந்துள்ளது. வன்னியில் உதயராசா தலைமையில் ஒரு அணியும் யாழ்ப்பாணத்தில் ஶ்ரீகாந்தா , சிவாஜிலிங்கம் தலைமையில் மற்றொரு அணியும் பிரிந்தது. செல்வம் அடைக்கலநாதனின் தலைமையை அவர்கள் விரும்பவில்லை.

சிவாஜிலிங்கத்துக்கும் ஶ்ரீகாந்தாவுக்கும் உள்ள அர்பணிப்பு, தியாகம் என்பன செல்வம் அடைக்கலநாதனுக்கு கால் தூசு அளவுக்கு கூடவில்லை.

அவர் மோசடி ஊழல் பேர் வழி. பின்கதவு டீலை ரணில் விக்கிரமசிங்கவுடன் செய்தார். வெளிநாட்டில் எமது கட்சிக்கு ஆறு கிளைகள் ஒற்றுமையாக பலமாக இருந்தது. அதனை சின்னாபின்னமாகி சிதறடித்தது செல்வம் அடைக்கலநாதனும் குருசாமி சுரேந்திரனுமே.

செல்வம் அடைக்கலநாதன் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என நான் அழைப்பு விடுக்கிறேன். குருசாமி சுரேந்திரன் மக்கள் மத்தியில் இருந்து விரட்டியடிக்கப்பட வேண்டும். இவர்கள் பற்றிய ஆவணங்களை வெளியிட தயார். இது தொடர்பில் பொலிஸில் முறையிடுங்கள். சட்ட நடவடிக்கை எடுங்கள். கட்சியை கூட்டி
ஒழுக்காற்று நடவடிக்கை எடுங்கள். நான் ஆவணத்தை பொதுவெளியில் கொண்டுவந்து உங்களை சந்திக்கத் தயார்.

நீங்கள் போராட்டத்தில் இணைந்த காலத்தில் இதுவரை இராணுவத்துக்கு எதிராக ஒரு ரவுண்ஸையாவது சுட்டிருப்பீர்களா என செல்வம் அடைக்கலநாதனிடம் கேட்கிறேன். ஒரு பங்களிப்பு இல்லை. ஒரு அர்ப்பணிப்பு இல்லை. கட்சியின் தலைவராக சொகுசாக இருந்து கட்சியின் வளங்களை சுரண்டிக்கொண்டிருக்கிறீர்கள்.

அமைச்சு பதவி போல பாராளுமன்ற குழுக்களின் தலைவராக இருந்தீர்கள். 22 அலுவலரை உங்களுக்கு தந்தார்கள். போராளியின் குடும்பத்தைச் சேர்ந்த யாரையாவது அதற்கு நியமித்தீர்களா? போராளிகளின் குடும்பங்கள் பிச்சையெடுக்கிறது.

குருசாமி சுரேந்திரன் சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்றார். நான் சங்கு தான். நான் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தான். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரெலோ வன்னி மாவடட்ங்களில் வேலை செய்யவில்லை. அவர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு திரைமறைவில் ஆதரவு கொடுத்தார்கள். தமிழ் தேசிய கட்சிகள், பொதுக் கட்டமைப்பு, ஊடகங்களுக்கு இது தெரியும். இங்கு சங்குக்கு வேலை செய்தது நான் மட்டும் தான்.

இதற்கு பிரதியுபகாரமாக ரணிலிடம் இருந்து பெருந்தொகையான பணத்தை பெற்று குருசாமி சுரேந்திரன் ஊடாக மட்டும் எட்டுக் கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறார்.
இதன்மூலம் மீன்பிடி உபகரணங்களும் சமூக சேவைகளும் வழங்கப்படுகிறது. வாங்கிய பணத்தை கட்சியின் ஏனைய மாவட்ட பிரதிநிதிகளுக்கு வாங்கியிருக்கலாமே. தனியாக அவருக்கு மட்டும் வழங்க வேண்டிய தேவை என்ன? அவசியம் என்ன? குருசாமி எங்கிருந்து வந்தார். என்ன பங்களிப்பு செய்தார். இந்த பதிலுக்கு குருசாமி இங்கு வரவேண்டும். அடுத்த பத்திரிகையாளர் மாநாட்டில் முழு ஆவணங்களுடன் வருவேன்.

அந்த வகையில் குருசாமிக்கு ஒரு தமிழர் வாக்களிக்க கூடாது. சங்குக்கு வாக்களியுங்கள். சங்கில் நேர்மையான திறமையான பலர் இருக்கின்றார்கள். மாமனிதர் ரவிராஜின் மனைவி நல்ல ஒரு தெரிவு. குருசாமி போன்றவர்களுக்கு வாக்களித்தால் எங்கள் மண் விற்கப்படும். இனமானத்தை அடகு வைத்து விடுவார்கள் – என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
3
+1
0

இதையும் படியுங்கள்

இறக்குமதியாகும் வாகனங்களுக்கான வரி விபரம்

Pagetamil

பதவி விலகுவதாக அறிவித்தார் கனடா பிரதமர்: அமெரிக்காவின் புதிய மாநிலமாக இணைய ட்ரம்ப் அழைப்பு!

Pagetamil

முல்லைத்தீவில் கரையொதுங்கியவர்கள் உண்மையான அகதிகளா என ஆராய்கிறதாம் அனுர அரசு!

Pagetamil

முக்கிய தீர்மானங்கள் இல்லை… வழக்கம் போல கூடிக்கலைந்தது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி!

Pagetamil

அனுர ஜன.13- 17 வரை சீன விஜயம்!

Pagetamil

Leave a Comment