இரத்மலானை, படோவிட்ட பிரதேசத்தில் உள்ள கால்வாய் ஒன்று இன்று காலை திடீரென இரத்த சிவப்பாக மாறியதை அடுத்து, இது தொடர்பில் ஆராயப்பட்டு, நீரில் கைத்தொழில் சாயம் கலப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, மக்கள் அச்சமடைய வேண்டாம் என மத்திய சுற்றாடல் அதிகாரசபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இரகசியத் தகவலையடுத்து, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் மேல்மாகாண அலுவலகப் பிரதிநிதிகள் களப் பார்வையிட்டு, நீர் சிவப்பு நிறமாக மாறியதற்கான காரணத்தைக் கண்டறியும் சோதனையை மேற்கொண்டதுடன், தண்ணீரில் தொழிற்சாலைச் சாயம் கலந்ததை அறிந்தனர்.
இருப்பினும், PH சோதனையின்படி தண்ணீரில் வெளியிடப்பட்ட ரசாயனம் ஆபத்தானது அல்ல என்று முதற்கட்ட சோதனை நிரூபித்துள்ளது. மேலும் ஆய்வக சோதனைகளுக்காக அதிகாரிகள் மாதிரிகளை எடுத்துள்ளனர்.
மேலும் விசாரணையில், நேற்று பெய்த கனமழையின் போது அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தனது வீட்டு வளாகத்தில் சேமித்து வைத்திருந்த சாயம் கால்வாயில் அடித்து செல்லப்பட்டது தெரியவந்தது.
இரத்மலானையைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக இணைப்புக் கால்வாய்கள் சிவப்பு நிறமாக மாறக்கூடும் என்பதால், இரத்மலானையில் வசிக்கும் மக்களை அச்சமடைய வேண்டாம் என்று மத்திய சுற்றாடல் அதிகாரசபை கேட்டுக் கொண்டுள்ளது.