வவுனியாவில் பிறந்தநாள் விழாவில் மேற்கொள்ளப்பட்ட இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் இரகசியமாக கனடாவுக்குத் தப்பிச் செல்லத் தயாராகி வருவதாக வவுனியா மேல் நீதிமன்றத்துக்குத் தகவல் கிடைத்ததையடுத்து, அவரைக் கைது செய்து பிணையின்றி மூன்று மாதங்கள் சிறையில் அடைக்க வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் நேற்று முன்தினம் (3) பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஒன்றரை வருடங்களுக்கு முன்னர், வவுனியா, தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது இளம் தம்பதியரை தாக்கி கொலை செய்ததாக ஆறு பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. தற்போது, இந்த சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, அவர்களுக்கு எதிரான வழக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதேவேளை, பிரதிவாதிகளில் ஒருவர் கனடா செல்வதற்கான ஆவணங்களை இரகசியமாக தயாரித்து வருவதாக கிடைத்த தகவலையடுத்து, வவுனியா மேல் நீதிமன்ற சட்டத்தரணிகள் குழுவொன்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், அது தொடர்பான ஆதாரங்களை மேல் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.
அந்த தகவலை கருத்திற்கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவையடுத்து, சந்தேகநபரை கைது செய்த பொலிஸார், மேல் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து, 3 மாதங்கள் பிணையின்றி விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.