சட்டவிரோதமான முறையில் பொருத்தப்பட்ட சொகுசு காரை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவி ராஷி பிரபா ரத்வத்தவை விளக்கமறியலில் வைக்குமாறு கங்கொடவில பிரதான நீதவான் ருவினி ஜயவர்தன நேற்று உத்தரவிட்டுள்ளார்.
மிரிஹானவில் உள்ள தனது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த கார் தொடர்பில் நீதிமன்றில் ஆஜராகுமாறு வட்ஸ்அப் ஊடாக கிடைக்கப்பெற்ற அறிவித்தலின் பிரகாரம் அவர் நேற்று (04) நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
சட்டத்தரணி விதுர மஞ்சநாயக்க ஊடாக முன்னிலையாகிய அவர், தனக்கும் இந்தச் சம்பவத்திற்கும் தொடர்பில்லை எனத் தெரிவித்த போதும், பிரதம நீதவான் அதனை மறுத்து சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
அவரது வட்ஸ்அப் எண்ணுக்கு பொலிசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
மிரிஹான பொலிஸார் விசாரணைகளின் முன்னேற்றத்தை காட்டும் உண்மைகளை நீதிமன்றில் முன்வைத்தபோது, குறித்த வீட்டில் அவருக்குச் சொந்தமான வாகனம் இருப்பதாகக் கூறப்பட்டது.
சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்குமாறு பல சந்தர்ப்பங்களில் அவருக்கு நோட்டீஸ் வழங்கியதாகவும் பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தவும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை சிறையில் அடைக்கப்பட்டு சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மனைவி ராஷி பிரபா ரத்வத்தவின் அம்முதெனிய, மிரிஹானை, ஹால் வீதியில் உள்ள குடியிருப்பு ஒன்றின் வகன தரிப்பிடம் ஒன்றில் இருந்து கடந்த 26ஆம் திகதி இந்த கார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நவம்பர் 7ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது.