முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சொந்தமானது என கூறப்படும் Ford காரொன்று நேற்று முன்தினம் (02) கொட்டாவ லியங்கொடையில் உள்ள வாகன திருத்துமிடம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஹோமாகம விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.
28.02.2024 அன்று வாதுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ என்பவரின் சாரதி ஒருவரினால் பழுதுபார்ப்பதற்காக வாகனம் இருப்பதாகக் கூறி வாகனம் திருத்துமிடத்துக்குக் கொண்டு வரப்பட்டதுடன், அப்போது காரில் இலக்கத் தகடுகள் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். வாகனத்தை கொண்டு வந்த சாரதி, KM 5121 என எழுதப்பட்ட வாகனத்தின் தாள் ஒன்றை தன்னிடம் காட்டியதாகவும், அதன் பிரகாரம் மேற்படி இலக்கத்தை வாகனத்தின் இலக்கமாகக் குறிப்பிட்டதாகவும் வாகன திருத்துமிட உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்தார். ஆனால் 8 மாதங்களாகியும் வாகனத்தை எடுத்துச் செல்லாததால் வாகனம் திருத்துமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பில், ஹோமாகம விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம், பொலிஸ் குழுவொன்று 02 ஆம் திகதி அங்கு சென்று சோதனையின் போது இலக்கத் தகடுகள் இல்லாத இந்த வாகனத்தைக் கைப்பற்றியுள்ளனர். அந்த வாகனத்தில் எந்தவித அடையாளச் சான்றிதழும் இல்லாததால், இது பதிவு செய்யப்படாத வாகனமாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். அதன்படி, வாகனத்தின் சேஸ் எண் மற்றும் இன்ஜின் எண்ணின் படி, மோட்டார் போக்குவரத்து துறையிடம் இருந்து அறிக்கை வரவழைக்கப்பட்டு, காரின் அடையாளத்தை உறுதி செய்ய விசாரணை நடத்தப்படும்.