24.6 C
Jaffna
January 5, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

யாருக்கு வாக்களிக்கலாம்?-1: 30 இலட்சம் ரூபா பேரமும் பலனில்லை… நடமாட முடியாதவரும் வேட்பாளர்… சுமந்திரன் வெறுப்பாளர்களின் கடைசித் தஞ்சமான மாம்பழம்!

2024 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இன்னும் இரண்டு வாரங்களிற்குள் பொதுத்தேர்தல் வரவுள்ளது. கடந்த தேர்தல்களை போலல்லாமல், சத்தமில்லாத பிரச்சாரங்கள் நடந்து வருகிறது. ஆனாலும், அது பயங்கர சூடாக நடக்கிறது.

44 கட்சிகள்… 396 வேட்பாளர்கள் என யாழ்ப்பாண தேர்தல் களம் அதகளப்பட்டுள்ளது.

தெருவுக்கு தெரு வேட்பாளர்கள்… உற்றம் சுற்றத்தில் 2 வேட்பாளர்கள் என எல்லோரும் திக்குமுக்காடிப் போயுள்ளனர்.

ஒரே கட்சியில் இருந்தவர்கள் பல கட்சிகளாகவும், ஒரே தெரிவில் குடியிருப்பவர்கள் பல சுயேச்சைகளாகவும் களமிறங்கி, பெரும் அக்கப்போர் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு வைத்தியசாலை பிரச்சினைக்காக மக்கள் குரல் கொடுத்ததும், தமிழ் மக்களை வழிநடத்தும் தகுதி தனக்கு வந்து விட்டதாக பைத்தியக்காரத்தனமாக நம்பும் அர்ச்சுனா தலைமையில் ஒரு குழு, வெளிநாட்டு வதிவிட விசா பெற களமிறங்கிய மற்றொரு குழு, பணமிருப்பதால் களமிறங்கிய இன்னொரு குழுவென சுயேச்சைக்குழுக்கள் புற்றீசல்கள் போல பெருகியுள்ள தேர்தல் இது.

இந்த தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. பொருளாதார பிரச்சினை, தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க வேண்டுமென்ற தவறான சிந்தனையை மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது. தமிழ் மக்கள் பல தருணங்களில் அரசியல் தெளிவில்லாமல் செயற்படுவார்கள் என்ற கருத்தை, வலுப்படுத்துவதை போல தற்போதைய குழப்பநிலை காணப்படுகிறது.

இந்த பின்னணியில், தேர்தல் களத்திலிலுள்ள முக்கிய கட்சிகளின் பலம், பலவீனம், ஆபத்து, நன்மை- அவர்களுக்கு வாக்களிப்பதால் ஏதாவது நன்மையுண்டா போன்ற விரிவான அலசலை தொடர்ந்து வெளியிடவுள்ளோம்.

வாக்காளர்களுக்கு ஏற்பட்டுள்ள குழப்பத்தை ஓரளவுக்கேனும் சரிசெய்ய இந்த பகுதி உதவுமென நம்புகிறோம்.

மாம்பழம் இனிக்குமா?

இலங்கை தமிழ் அரசு கட்சிக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்ற வெறியுடன்- அந்த கட்சியில் வேட்பாளர் நியமனம் கிடைக்காதவர்கள் சுயேச்சையாக களமிறங்கியுள்ளனர். அவர்கள் சனநாயக தமிழ் அரசு கூட்டணியென தமக்குதாமே பெயரும் சூடியுள்ளனர். வட்டுக்கோட்டை தொகுதியில் தனக்கு ஆசனம் ஒதுக்கப்படும் என காத்திருந்த ஈ.சரவணபவன், அது கிடைக்காத நிலையில் ஆசனம் கிடைக்காத பிறரையும் இணைத்துக் கொண்டு சுயேச்சை அணியாக களமிறங்கியுள்ளார்.

தமிழ் தேசிய பசுமை இயக்கம் (பொ.ஐங்கரநேசன் தலைமையிலானது) கடந்த தேர்தலில் மாம்பழம் சின்னத்தை பயன்படுத்தியது. ஐங்கரநேசனும் தற்போது, சரவணபவன் அணியின் வேட்பாளர். ஐங்கரநேசனின் வாக்காளர்களை கவரலாமென மாம்பழம் சின்னத்தை கையிலெடுத்துள்ளனர்.

ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவும் இந்த அணியின் வேட்பாளர். அவர் தனக்கான நல்ல பெயரை சம்பாதித்து வைத்துள்ளவர். இந்த அணியில் களமிறங்கியது அவருக்கும் சற்று சறுக்கலே.

ஈ.சரவணபவனுக்கு இலங்கை தமிழ் அரசு கட்சியில் ஆசனம் மறுக்கப்பட்டதும், அவர் உடனடியாக சங்கு சின்னத்தில் களமிறங்கியுள்ள ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினரை அணுகினார். அந்த அணியின் வேட்பாளராக அறிவிக்கப்படவிருந்த ஒருவரை அணுகி, தேர்தல் களத்திலிருந்து விலகி, தனக்கு அந்த வாய்ப்பை வழங்குமாறு பணப் பேரம் பேசினார். இதற்காக ரூ.30 இலட்சத்துக்கு அதிகமான பணம் உடனடியாக வழங்குவதாகவும், வேட்பாளரிலிருந்து விலகுபவர் மாகாணசபை தேர்தலில் வெற்றிபெற உதயன் பத்திரிகையும், டான் தொலைக்காட்சியும் முழுமையாக பணியாற்றும் என்றும் உத்தரவாதம் கொடுத்தார்.

என்றாலும், சரவணபவன் அணுகியவர்- அரசியலில் கத்துக்குட்டி மாத்திரமல்ல- அரிவரியும் தெரியாதவர். யாழ் மாநகரசபை தேர்தலில் ஒரு வட்டாரத்திலும் வெற்றிபெற முடியாதவர். ஆனால், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியீட்டுவேன் என கற்பனைக் கோட்டை கட்டிக்கொண்டு திரிபவர். அப்படியானவர்- ஆசனத்தை விட்டுக்கொடுப்பாரா?. மறுத்து விட்டார்.

சுரேஸ் பிரேமச்சந்திரன் பழுத்த அரசியல்வாதியென்றாலும், அவரும் இப்படியான டீல் ஒன்றில் சறுக்கி விட்டார். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் கிளிநொச்சியில் வேட்பாளரை களமிறக்கும் பொறுப்பு சுரேஸ் பிரேமச்சந்திரனிடம் வழங்கப்பட்டிருந்தது. அவரிடம் கிளிநொச்சியில் ஆள் இல்லை. அந்த ஆசனத்தை பெற, சுரேஸின் வீடு தேடிச்சென்றர் சரவணபவன். சுரேஸின் தேர்தல் விளம்பரங்களை பாதிக்கட்டணத்தில் உதயன் பத்திரிகையில் வெளியிடுவதாக உத்தரவாதம் கொடுத்தவர், தான் வேறு என்ன செய்ய வேண்டுமென கேட்டார். அதாவது- சுரேஸின் தேர்தல் செலவுக்கான பணத்தில் ஒரு பகுதியை வழங்க தயாராக இருக்கிறார் என பொருள் கொள்ளத்தக்க டீல் அது. சுரேஸூக்கு அது தெரியாமலில்லை.

ஆனால், சுரேஸ் அதை பயன்படுத்தவில்லை. ஏன் தெரியுமா? சரவணபவனும் ஓரளவு வாக்கெடுக்கக்கூடியவர். தமது கூட்டணிக்குள் வந்து, தன்னைவிட அவர் அதிக வாக்கெடுத்தால், தான் பாராளுமன்றம் செல்ல முடியாமல் சென்றுவிடுமென தப்புக்கணக்கிட்டிருப்பார் போல. சரவணபவன் மட்டுமல்ல, அவருடன் சேர்ந்து தானும் கவிழ்ந்து விழுகிறேன் என்பதை புரியாமல், சுரேஸ் அந்த டீலை பயன்படுத்தவில்லை.

இதை தொடர்ந்தே, அவசர அவசரமாக மாம்பழம் சின்னத்தில் சுயேச்சைக்குழு களமிறங்கியது.

அவசரஅவசரமாக களமிறக்கப்பட்ட அணியென்பதால், ஆட் கணக்கிற்காக 9 பேரை நியமித்தனர்.

கரவெட்டி பிரதேசசபை தவிசாளராக இருந்தவர் த.ஐங்கரன். தற்போது நோய்வாய்ப்பட்டு நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளார். சில வருடங்களாக வீட்டிலேயே முடங்கியுள்ளார். அவரும் ஒரு வேட்பாளர். அவரால் தேர்தல் பிரச்சாரங்களிலேயே கலந்துகொள்ள முடியாது. மாவட்ட செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யும் போதும் கலந்துகொள்ள முடியவில்லை. அப்படியானவர் மக்கள் பிரதிநிதியாகி எதை சாதிக்கப் போகிறார் என்ற கேள்வி உங்களிடம் எழும். கொஞ்சம் பணமிருந்தால், அடங்காத பதவிவெறியன்றி வேறென்ன?

பொ.ஐங்கரநேசன் வடமாகாணசபையில் அமைச்சு பதவிவகித்தவர். பின்னர், மாகாணசபைக்குள் ஏற்பட்ட குழப்பத்தில் ஊழல் குற்றச்சாட்டை எதிர்கொண்டு பதவியிழந்தார். ஆனால் அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு தெளிவான ஆதாரங்களையும் எந்த தரப்பினாலும் முன்வைக்க முடியவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.

ஈ.சரவணபவன் மீது நீண்டகாலமாக சில குற்றச்சாட்டுக்கள் உள்ளன. யாழில் முன்னர் இயங்கிய சப்ரா நிதி நிறுவனத்துடன் அவரது பெயரும் தொடர்புபட்டது. அந்த நிறுவனம் பொதுமக்களின் பணத்தை பெரும் மோசடி செய்தது.

வர்த்தகரான அவர், நாடாளுமன்ற உறுப்பினராக பதவிவகித்த போதும், அதனை தனது வர்த்தக அனுகூலங்களுக்காக பயன்படுத்தினார் என்ற விமர்சனங்கள் உள்ளன.

இதுதவிர, எம்.ஏ.சுமந்திரன் வெறுப்பாளர்கள் சிலரும் இந்த அணியில் களமிறங்கியுள்ளனர். எம்.ஏ.சுமந்திரன் வெறுப்பாளர்கள் என்ற அடையாளத்தை தவிர்த்தால், வேறெந்த அடையாளமும் இந்த அணிக்கு கிடையாது. நீண்டகாலத்துக்கு அந்த அணி செயற்படும் வாய்ப்பும் கிடையாது. இன்னொரு தேர்தலில் வேறு கட்சிகளில் வாய்ப்பு கிடைத்தால், இவர்கள் ஆளாளுக்கு பறந்து விடுவார்கள்.

யாழ்- கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் இந்த அணி எந்த ஆசனத்தையும் வெற்றிபெறும் வாய்ப்பு எதுவும் கிடையாது. ஈ.சரவணபவன் வட்டுக்கோட்டை பகுதியில் சிறியளவு வாக்கு சேகரிப்பார். அது, இலங்கை தமிழரசு கட்சிக்கு சிறிய சேதத்தை உருவாக்கும். பெரிய தாக்கத்தை செலுத்தாது.

மாம்பழம் தமிழ் அரசியலில் கனியாது. விதை முளை கொள்ளாது.

What’s your Reaction?
+1
0
+1
2
+1
0
+1
1
+1
0
+1
1
+1
1

இதையும் படியுங்கள்

அனுர ஜன.13- 17 வரை சீன விஜயம்!

Pagetamil

கற்பனைக் குதிரைக்கு வயது 75

Pagetamil

திருகோணமலை கடற்கரையில் பெண்ணின் சடலம்

east tamil

சைபர் தாக்குதலுக்கு இலக்கானது இலங்கை பொலிஸ் யூடியூப் சேனல்

east tamil

உப்பிற்கு தட்டுப்பாடு இல்லை – டி. நந்தன திலக

east tamil

Leave a Comment