இலங்கை தமிழ் அரசு கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டில், அந்த கட்சியின் தலைவராக பதவிவகித்த மாவை சேனாதிராசா கலந்து கொள்ளவில்லை. அவர் நிகழ்வில் கலந்து கொள்ள விரும்பாததால் நிகழ்வை தவிர்த்ததாக, அவருக்கு நெருக்கமான குடும்ப ஆதாரங்கள் மூலம் தமிழ் பக்கம் அறிந்தது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (2) யாழில் வெளியிடப்பட்டது.
கட்சியின் தலைவராக பதவிவகித்த மாவை சேனாதிராசா இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. அவரது உடல்நலத்தை கருத்தில் கொண்டு, நிகழ்வில் கலந்துகொள்ளவில்லையென, கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், நிகழ்வில் அறிவித்தார்.
எனினும், கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டை மாவை சேனாதிராசா வேண்டுமென்றே தவிர்த்ததாக, தமிழ் பக்கம் அறிந்தது.
அவர் நிகழ்வில் கலந்துகொள்வதை குடும்ப உறுப்பினர்களும் விரும்பியிருக்கவில்லை.
அவர் நிகழ்வை தவிர்ப்பதை புரிந்து கொண்ட தமிழரசு கட்சி வேட்பாளர்கள் சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், பா.சத்தியலிங்கம், இ.ஆர்னோல்ட் ஆகியோர், மாவை சேனாதிராசாவின் வீட்டிற்கே நேரில் சென்றுள்ளனர்.
தந்தையின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர் நிகழ்வில் கலந்துகொள்ள முடியாது என மாவையின் மகளே, அந்த குழுவினருக்கு பதிலளித்ததாக தமிழ்பக்கம் அறிந்தது. வைத்தியரான அவர் அண்மையில் நாடு திரும்பியிருந்தார்.
இதையடுத்து, புகைப்படம் எடுப்பதற்காக தயாராகுமாறு மாவை சேனாதிராசாவை வற்புறுத்திக் கேட்டுக்கொண்ட தமிழரசு கட்சி வேட்பாளர்கள், அவரிடம் தேர்தல் விஞ்ஞாபனத்தை கையளித்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர்.