பாலஸ்தீன போராட்டக்குழுவான ஹமாஸ் அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வார், இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். அவரை கொன்றதாக இஸ்ரேல் வியாழன் இரவு அறிவித்தது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேலிற்குள் ஹமாஸ் படையெடுப்பு நடத்தியதுடன், பணயக்கைதிகளையும் கைப்பற்றிய சம்பவத்திற்கு உத்தரவிட்ட சின்வார், தற்போது இஸ்ரேலால் கொல்லப்பட்டுள்ளார்.
புதன்கிழமை தெற்கு காசாவில் உள்ள ரஃபாவில் துப்பாக்கிச் சண்டையில் சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் மற்றும் ஷின் பெட் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்தது.
சின்வார் அங்கு தங்கியிருப்பதை அறிந்து, அவர் நேரடியாக குறிவைக்கப்படவில்லை. வியாழக்கிழமை காலை இஸ்ரேல் துருப்புக்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தபோது, சம்பவத்தில் கொல்லப்பட்ட மூன்று ஹமாஸ் போராளிகளில் ஒருவர் சின்வாரை ஒத்திருந்ததையடுத்து, அவரது விரல் வெட்டப்பட்டு டிஎன்ஏ சோதனைக்காக அனுப்பப்பட்டது.
பரிசோதனையில், அந்த நபர் சின்வார் என்பது உறுதியாகியது.
யாஹ்யா சின்வாரின் மரணத்தை ஹமாஸூம் உறுதி செய்துள்ளது.
கடந்த சில வாரங்களாக, காஸாவில் மூத்த ஹமாஸ் அதிகாரிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை சுட்டிக்காட்டிய பகுதிகளில் இஸ்ரேல் துருப்புக்கள்செயல்பட்டதாக இராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 828 வது பிஸ்லமாச் படைப்பிரிவைச் சேர்ந்த ஒரு குழு, சின்வாரையும் மற்ற இரண்டு போராளிகளையும் கொன்றது.

ரோந்து சென்ற இஸ்ரேல் துருப்புக்களும், சின்வார் குழுவும் எதேச்சையாக எதிர்கொண்டுள்ளனர். சின்வாரும் அவரது 2 மெய்ப்பாதுகாவலர்களுமே இருந்துள்ளனர். சின்வாருக்கு முன்பாக அவரது மெய்ப்பாதுகாவலர்கள் சென்று கொண்டிருந்துள்ளனர். அவர்களை இஸ்ரேல் துருப்புக்கள் கண்டு, துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் மெய்ப்பாதுகாவலர்கள் இருவரும் காயமடைந்துள்ளனர். அவர்கள் ஒரு கட்டிடத்திற்குள் தப்பிச் செல்ல, சின்வார் தனியாக மற்றொரு கட்டிடத்துக்குள் தப்பிச் சென்றுள்ளார்.
இஸ்ரேல் இராணுவத்தின் டாங்கிகளும் இரு கட்டிடங்களின் மீதும் தாக்குதல் நடத்தின.
பின்னர் சின்வார் இரண்டாவது மாடிக்கு சென்றார். ஒரு டாங்கி கட்டிடத்தின் மீது மற்றொரு ஷெல் வீசியது, . அதை தொடர்ந்து ஒரு காலாட்படை படைப்பிரிவு தேடுவதற்கு மேலே சென்றது. சின்வார் இரண்டு கையெறி குண்டுகளை வீசினார், அதில் ஒன்று வெடித்தது. இஸ்ரேல் துருப்புக்கள் பின்வாங்கினர். அதை தொடர்ந்து, சின்வார் பதுங்கியிருந்த அறைக்குள் தேடுதல் நடத்த ஒரு ட்ரோன் உள்ளே நுழைந்துள்ளது. அறைக்குள் கையில் காயமடைந்த நிலையில், முகத்தை மூடிய நிலையில் சின்வார் உட்கார்ந்திருந்தார். அவர் ஒரு மரக் குச்சியை ட்ரோன் மீது வீசினார். மற்றொரு டாங்கி அங்கு ஷெல் வீசியது. இதில் சின்வார் கொல்லப்பட்டார்.
வியாழன் காலை, கட்டிடத்துக்குள் நுழைந்த இஸ்ரேல் துருப்புக்கள் கொல்லப்பட்ட நபரின் முகத்தைப் பார்த்தனர். அவர் சின்வாரைப் போல இருப்பதைக் கவனித்தனர். புலனாய்வாளர்கள் அவரது அடையாளத்தை சரிபார்க்க டிஎன்ஏ பரிசோதனை நடத்துவதற்காக அவரது விரலின் ஒரு பகுதியை எடுத்தார். அப்போது சின்வாருடன் பணயக்கைதிகள் யாரும் இல்லை.
Drone Footage showing the Leader of Hamas, Yahya Sinwar armed with a Stick and hiding behind several Chairs on the Second Floor of a Building, right before his Elimination. pic.twitter.com/a3tOcfFXWV
— OSINTdefender (@sentdefender) October 17, 2024
இஸ்ரேல் இராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்எம். டேனியல் ஹகாரி வியாழன் இரவு செய்தியாளர் கூட்டத்தில் சின்வார் கொல்லப்பட்டதை உறுதி செய்தார். அவர் ஹமாஸின் சுரங்க வழிகளில் சுற்றித்திரிந்ததாகவும், இஸ்ரேல் துருப்புக்கள் பாதைகளை அடைத்ததால், வடக்கிற்கு தப்பிச் செல்ல முயன்ற போது கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.