எதிர்வரும் நவம்பர் 14, 2024 அன்று நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்களிக்க சிறப்பு உதவிகள் வழங்கப்படும் என தேர்தல் ஆணைக்குீ அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பின்படி, முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ பார்வையற்றவர்கள் அல்லது உடல் ஊனமுற்ற வாக்காளர்கள், தங்கள் வாக்குச்சீட்டைக் குறிக்க உதவுவதற்காக ஒருவரை அழைத்து வர அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த உதவியாளர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும், வேட்பாளராக இருக்கக்கூடாது, எந்த குறைபாடுகளும் இல்லாமல் இருக்க வேண்டும். உதவியாளர் ஒரு அரசியல் வேட்பாளரின் அங்கீகரிக்கப்பட்ட முகவராகவோ அல்லது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டவராகவோ இருக்க முடியாது.
“உதவியாளர் ஒருவரை அழைத்து வர விரும்பும் வாக்காளர்கள் “தகுதி சான்றிதழை” பெற வேண்டும், அதை உள்ளூர் பிரதேச செயலகங்கள், கிராம அலுவலர் அலுவலகங்கள் அல்லது தேர்தல் ஆணைக்குழுவின் இணையதளத்தில் பெறலாம். இந்த சான்றிதழை தேர்தல் நாளில் வாக்குச்சாவடியில் சமர்ப்பிக்க வேண்டும்” என்று ஆணைக்குழு கூறியது.
“உதவியாளர் வாக்களிக்கும் அறையில் வாக்காளருக்கு உதவுவார், ஆனால் வாக்காளர் மற்றும் உதவியாளர் இருவரும் தேசிய அடையாள அட்டை போன்ற செல்லுபடியாகும் அடையாள ஆவணங்களைக் கொண்டு வருவது முக்கியம்,” என்று அது மேலும் கூறியது.