அம்பாந்தோட்டை மாவட்டத்தை சேர்ந்த பிரபல அரசியல் குடும்பமான ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த யாரும், 2024 பொதுத்தேர்தலில் போட்டியிடுவதில்லையென தீர்மானித்துள்ளனர். இலங்கை அரசியல் வரலாற்றில் கடந்த 88 வருடங்களில், ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த யாருமே போட்டியிடாத பொதுத்தேர்தல இதுவாகும்.
பொதுத் தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் குழு சார்பில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க வேட்புமனுக்களை கையளித்தார்.
1936 ஆம் ஆண்டில் நடந்த 2வது இலங்கை அரசாங்கசபை தேர்தலில், டொன் மத்யூ. ராஜபக்ஷ, அம்பாந்தோட்டை மாவட்டத்தில் வேட்பாளராகத் தேர்தல் அரசியலைத் தொடங்கினார். பின்னர் டொன் அல்வின் ராஜபக்ச, டி.ஏ.லக்ஷ்மன் ராஜபக்ஷ, ஜோர்ஜ் ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ,
ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த நிருபமா ராஜபக்ச மற்றும் ஷியாம்லால் ராஜபக்ச ஆகியோர் ஹம்பாந்தோட்டை மாவட்ட தேர்தல் வேட்பாளர்களாக அவ்வப்போது தோன்றினர்.
முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச இம்முறை புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராக போட்டியிட்டாலும் ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல.
ஹம்பாந்தோட்டை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார்.