இரத்தினபுரி மாவட்ட வேட்புமனுப் பட்டியலில் இருந்து தனது பெயர் திடீரென நீக்கப்பட்டமை தொடர்பில் நடிகை தமிதா அபேரத்ன இரத்தினபுரி தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் நேற்று (11) முறைப்பாடு செய்துள்ளார்.
நடிகை தமிதா அபேரத்ன நேற்று (11) இரத்தினபுரி மாவட்ட பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் இரத்தினபுரி மாவட்டத்திற்கான வேட்புமனுக்களை வழங்குவதற்காக இரத்தினபுரி மாவட்ட செயலகத்திற்கு வந்த போது வேட்பு மனுப் பட்டியலில் பெயர் குறிப்பிடப்படாததால் ஏமாற்றமடைந்தார். அந்த மாவட்டத்தின் ஏனைய வேட்பாளர்கள் மற்றும் பலமானவர்களின் எதிர்ப்பினால் அவரது பெயர் வேட்புமனுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதுடன், மாவட்டத் தலைவர் ஹேஷா விதாரணவினால் தமிதாவின் பெயர் இல்லாத வேட்பு மனுப் பட்டியல் இரத்தினபுரி மாவட்டச் செயலாளரும் தேர்தல் அதிகாரியுமான திரு.வசந்த குணரத்னவிடம் கையளிக்கப்பட்டது.
தனது பெயர் குறிப்பிடப்படாததால், தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாக இரத்தினபுரி மாவட்டச் செயலகம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தமையால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. தமிதா அபேரத்ன நேற்று (11) காலை இரத்தினபுரி மாவட்ட செயலகத்திற்கு வேட்புமனுக்களை கையளிக்கும் வேளையில் வந்து சுமார் அரை மணித்தியாலம் அங்கு தங்கியிருந்து விட்டுச் சென்றார்.
வேட்பு மனுக்களை கையளித்த பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட தலைவர் ஹேஷா விதானகே தெரிவிக்கையில், ஐக்கிய மக்கள் சக்திக்கு தமிதா அபேரத்ன அளப்பரிய பணிகளை செய்திருந்தாலும் இரத்தினபுரிக்கு வெளியில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தார். இரத்தினபுரி மாவட்டத்திற்கு பெண்களின் பிரதிநிதித்துவம் தேவை என்பதாலேயே இரத்தினபுரி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் மன்றத்தின் செயலாளர் திருமதி ரித்மா தர்மவர்தன நியமிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.