ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பெண் வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் இரவிராஜ் அவர்களின் பாரியார் திருமதி சசிகலா ரவிராஜ் வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினரான சசிகலா கடந்த பொதுத் தேர்தலில் தமிழரசின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார்.
இத் தேர்தலில் தமிழரசுக் கட்சியே தனக்கு எதிராக சதி செய்ததாக சசிகலா குற்றஞ்சாட்டியிருந்த நிலையில் கட்சி மீதும் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்திருந்தார்.
இவ்வாறான நிலையில் இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழரசில் போட்டியிடுவதற்கு விண்ணப்பித்திருந்தார். ஆனாலும் தமிழரசில் அவருக்கு வேட்பாளர் நியமனம் கொடுக்கப்படவில்லை.
தமிழரசுக் கட்சியின் இந்த வேட்பாளர் தெரிவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அடாவடித்தனமாக பல்வேறு குழறுபடிகளை செய்து தனக்கு வேண்டியவர்களுக்கு நியமனத்தை கொடுப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமையவே சசிகலாவிற்கு மட்டுமல்லாது கட்சியின் நீண்டகால உறுப்பினர்கள் பலருக்கும் வேட்பாளர் நியமனம் கொடுக்கப்படாமல் தனக்கு தேவையானவர்களிற்கே சுமந்திரன் நியமனம் கொடுப்பதாகவும் குற்றஞ்சாட்டபடுகிறது.
இந் நிலையில் தற்போது தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேறி ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சின்னமான சங்குச் சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் இன்றையதினம் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவர் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் பெற்று வேட்புமனுவில் கையெழுத்திட்டார். இதற்குள் ரெலோ தரப்பு இடையில் புகுந்து, அவரை தமது கட்சியின் அங்கத்துவத்தை பெறுமாறு வலியுறுத்தியது.