இலங்கை தமிழ் அரசு கட்சியின் மற்றொரு முக்கியஸ்தரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து சங்கு சின்னத்தில் பொதுத்தேர்தலில் போட்டியிடும் முனைப்பில் உள்ளார்.
எதிர்வரும் பொதுத்தேர்தலை முன்னிட்டு, கட்சிகள் தமது வேட்பாளர்களை தெரிவு செய்து வருகின்றன. ஏற்கெனவே உட்கட்சிப் பூசலால் தள்ளாடி வரும் இலங்கை தமிழ் அரசு கட்சி, தற்போது மேலும் சிக்கல்களை எதிர்கொள்கிறது. வேட்பாளர்களை தெரிவு செய்ய நியமிக்கப்பட்ட 11 பேர் கொண்ட குழுவில் பெரும்பாலானவர்கள் எம்.ஏ.சுமந்திரன் ஆதரவாளர்கள்.
அவர்கள், யாழ் மாவட்ட வேட்பாளர் பட்டியலை தெரிவு செய்துள்ளனர். மாற்றத்துக்கு உள்ளாகலாமென குறிப்பிட்டு, வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில், எம்.ஏ.சுமந்திரனுக்கு ஆதரவாக பேஸ்புக்கில் கருத்திடுபவர்களுக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது. இது பல தரப்பினராலும் கேலியாக பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த நிலைமையினால், இலங்கை தமிழ் அரசு கட்சியின் பல பிரமுகர்கள் கட்சியை விட்டு வெளியேற தீர்மானித்துள்ளனர். ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா ஏற்கெனவே கட்சியை விட்டு வெளியேறி விட்டார்.
சசிகலா ரவிராஜ் இன்று கட்சியை விட்டு வெளியேறி, தேர்தலில் போட்டியிடும் அறிவிப்பை விடுப்பார்.
இந்த வரிசையில் முக்கியமான இலங்கை தமிழ் அரசு கட்சியின் பிரமுகர் ஒருவரும் கட்சியிலிருந்து வெளியேறும் பேச்சில் ஈடுபட்டு வருகிறார். யாழ் மாவட்டத்தை சேர்ந்த மேற்படி பிரமுகர், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக தேர்தலில் போட்டியிட முனைகிறார்.
இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஏற்கெனவே வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்ட போதும், யாழ்ப்பாண பட்டியலில் தமிழ் தேசிய கட்சி தரப்பில் பலவீனமான வேட்பாளர் உள்ளார். அவரை நீக்கிவிட்டு, தமிழ் அரசு கட்சியின் பிரமுகரை இணைக்கும் நகர்வு நடந்து வருகிறது.
இதற்கு ரெலோ தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ரெலோ சார்பில் யாழ்ப்பாணத்தில் போட்டியிடும் குருசாமி சுரேன், தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே சமத்துவக்கட்சியை இணைப்பதற்கும் ரெலோ தரப்பு எதிர்ப்பு வெளியிட்டிருந்தது. அதிகவாக்கு பெறுபவர்கள் கூட்டணிக்குள் இணைவது தமது வெற்றியை பாதித்து விடலாம் என்ற அடிப்படையில் ரெலோ தரப்பு, புதியவர்கள் இணைப்பதை கண்மூடித்தனமாக எதிர்த்து வருகிறது.
இது தொடர்பான பேச்சுக்காக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று கூடவுள்ளனர்.