இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் எம்.ஏ.சுமந்திரனும், சி.சிறிதரனும் முரண்பாடின்றி போட்டியிடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், மாவட்டத்தில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்கள், இன்று (6) இறுதி செய்யப்படவுள்ளனர்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு நேற்று வவுனியாவில் கூடியது.
இதன்போது, யாழ் மாவட்டத்தில் எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் ஆகியோர் ஒற்றுமையாக போட்டியிட வேண்டும், இருவரும் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்ற யோசனையை சிரேஸ்ட தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் முன்மொழிந்தார்.
அதை, சாணக்கியன் இராசபுத்திரன் வழிமொழிந்தார்.
இதனை எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் இருவரும் ஏற்றுக்கொண்டனர்.
இதன்பின்னர், மாவட்டரீதியில் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டது. யாழ் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு கே.சயந்தன், கே.வி.தவராசா, இளங்கே (தந்தை செல்வாவின் பேரன்) உள்ளிட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் பத்திநாதன் (முன்னாள் வடமாகாணசபை பிரதம செயலாளர்) டினேசன் உள்ளிட்டோர் விண்ணப்பத்திருந்தனர்.
ஒவ்வொரு மாவட்டரீதியிலான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, வேட்பாளர் பட்டியல் இன்று இறுதி செய்யப்படும்.
இந்த கூட்டத்தில், தோல்வியடைந்த எம்.பிக்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்ற விவகாரம் விவாதிக்கப்பட்டது. அப்படியொரு தீர்மானம் கடந்த மத்தியகுழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது தனக்கு தெரியாது, அப்படியொரு தீர்மானம் தேவையற்றது என மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
கடந்த மத்தியகுழு கூட்டத்தில் அப்படியொரு தீர்மானம் எடுக்கப்பட்டதற்கான ஊடகச்செய்திகளை ஏனையவர்கள் காண்பித்தனர். எனினும், கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் எம்.பிக்களிற்கு இடம் வழங்குவதா என்பது தொடர்பில் இன்றைய கூட்டத்திலேயே இறுதி தீர்மானம் எடுக்கப்படும்.
நேற்றைய கூட்டம் முடிந்ததும், எம்.ஏ.சுமந்திரன், பா.சத்தியலிங்கம், இ.சாணக்கியன் ஆகியோர் திருகோணமலை புறப்பட்டனர். திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் தமிழ் கட்சிகள் ஓரணியில் போட்டியிட வேண்டுமென்ற குரல்கள் வலுத்துள்ள நிலையில், திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடுவது தொடர்பில் திருகோணமலை ஆயர் உள்ளிட்ட தரப்புக்களுடன் பேச்சு நடத்த அவர்கள் சென்றனர்.