ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கிடையில் எதிர்வரும் தேர்தலுக்கான அணுகுமுறைகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று நேற்று (4) கொழும்பில் நடைபெற்றது.
எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் ஏனைய அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயற்குழு தீர்மானித்ததை தொடர்ந்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சுதந்திர முன்னணியின் தலைவரான முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் ஆகியோர் தலைமையில் இந்த உரையாடல் இடம்பெற்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயற்குழு சமீபத்தில் மற்ற கட்சிகள், அமைப்புகள் மற்றும் கூட்டணிகளுடன் பேச்சுவார்த்தைகளை தொடங்க முடிவு செய்துள்ளது. அதற்கான முதல் படியாக இந்த சந்திப்பு அமைந்தது.
இக்கலந்துரையாடலில் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஆழமாக ஆராயப்பட்டதுடன், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல்கள் மாத்திரமன்றி மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களுக்கான உத்திகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.