Pagetamil
முக்கியச் செய்திகள்

லைக்கா நிறுவனத்தின் கட்சியுடன் கூட்டணியா?: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று தீர்மானம்!

லைக்கா நிறுவனத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்ட அரசியல் கட்சியொன்று, இம்முறை பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கில் வேட்பாளர்களை களமிறக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதேபோல, மற்றொரு கட்சி மலையகத்தில் வேட்பாளர்களை களமிறக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட சுபாஸ்கரன் அல்லிராஜாவின் லைக்கா நிறுவனம், இலங்கையில் வர்த்தக முதலீடுகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது. எனினும், ரெலிகொம் போன்ற நிறுவனங்களை வாங்க முயற்சித்த போது, தீவிர சிங்கள கட்சிகளின் எதிர்ப்பால் அது தள்ளிவைக்கப்பட்டது.

இந்த பின்னணியில், தமது வர்த்தக நலன்களை பேண, அரசியல் சக்திகளின் துணையும் அவசியம் என்ற அடிப்படையில், இலங்கையில் சுமார் 3 அரசியல் கட்சிகளை லைக்கா நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில், ஒரு கட்சியின் ஊடாக வடக்கு கிழக்கிலும், மற்றொரு கட்சியின் ஊடாக மலையகத்திலும் வேட்பாளர்களை களமிறக்கும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஜனாதிபதி தேர்தலில், சங்கு சின்னத்தில் களமிறங்கிய தமிழ் பொதுவேட்பாளருக்காக லைக்கா நிறுவனம் சுமார் 3 கோடி ரூபா அளவில் பணம் வழங்கியிருந்தது. சங்கு சின்னத்தை பிரபலப்படுத்த இந்த பணமே உதவியது.

இதை தொடர்ந்து, சங்கு சின்னத்தில் அமையும் கூட்டணியில் தமது கட்சியும் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள லைக்கா விரும்பியுள்ளது. தற்போது சங்கு சின்னத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிடவுள்ள நிலையில், லைக்காவின் விருப்பம், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லைக்கா நிறுவனத்தின் பின்னணியிலுள்ள கட்சியை தமது கூட்டணியில் இணைப்பது தொடர்பான இறுதி முடிவை, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று (5) மேற்கொள்ளும்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சிகளுக்கிடையிலான கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இதில், வேட்பாளர்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் பொதுத்தேர்தலில் லைக்கா நிறுவனத்தின் கட்சி களமிறங்கவுள்ள நிலையில், தமிழ் அரசியல் பரப்பிலுள்ள பல தரப்பினருடனும் சுபாஸ்கரன் நேரடி கலந்துரையடலில் ஈடுபட்டுள்ளார். முன்னாள் எம்.பிக்கள் சிறிதரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் யாழ் மாநகரசபை முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் உள்ளிட்டவர்களுடன் சுபாஸ்கரன் கொழும்பில் சந்தித்து பேசினார். இதன்போது, பொதுத்தேர்தல் முடிவுகள் தமிழ் கட்சிகளுக்கு எப்படியிருக்கும் என்பதை பற்றி கேட்டறிந்து கொண்டுள்ளார்.

இதுதவிர, லைக்கா நிறுவனத்தின் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிடுமாறு ஏனைய தரப்புக்களிடம் சில தரப்புக்கள் பேரம்பேசியும் வருகின்றனர். லைக்கா நிறுவனத்தின் கட்சியின் உறுப்புரிமையை பெறுமாறும் கோரப்பட்டுள்ளது. அதிக வாக்கு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படும் தரப்புக்களிடமே இந்த பேரம் பேசப்பட்டு வருகிறது. அவ்வாறு லைக்கா கட்சியின் அங்கத்துவத்தை பெற்றால், தேர்தல் செலவின் பெரும்பகுதியை லைக்கா நிறுவனமே வழங்குமென்றும் தரகர்களால் கூறப்பட்டு வருகிறது. தம்மிடம் இது பற்றி பேசப்பட்டதாகவும், ரெலோ அமைப்பின் பிரமுகர் ஒருவரே இந்த கலந்துரையாடலின் தரகர் என்றும், இரண்டுக்கும் மேற்பட்ட ஆதாரங்கள் தமிழ்பக்கத்திடம் தெரிவித்திருந்தன.

இதையும் படியுங்கள்

முன்னர் ஒன்றாக வந்தீர்கள்… இப்போது மூன்றாக வந்துள்ளீர்கள்; தமிழர்களுக்கிடையிலானதே மீனவர் பிரச்சினை: மோடி- தமிழ் கட்சிகள் சந்திப்பில் பேசப்பட்டவை!

Pagetamil

இலங்கை- இந்தியாவுக்கிடையில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

Pagetamil

நரேந்திர மோடிக்கு பெரும் வரவேற்பு!

Pagetamil

‘என் மனைவியை தொட்டால்…’: ஜனாதிபதி அனுரவை எச்சரித்த மஹிந்தவின் சகா!

Pagetamil

Update: புதிய வாகன பதிவுகளுக்கு மட்டுமே வரி அடையாள எண் தேவை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!