முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்காக போலியான பிறப்புச் சான்றிதழை தயாரித்த குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்டது.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
முன்னதாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டதுடன், குற்றப்பத்திரிகையை நிறைவேற்றியதைத் தொடர்ந்து, குற்றஞ்சாட்டப்பட்ட கமகே தலா இரண்டு ரூ. 25,000 பெறுமதியான காசுப்பிணை மற்றும் ரூ.1 மில்லியன் பெறுமதியான சரீரப்பிணைகளில் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
2004 ஆம் ஆண்டு ஒக்டோபர் 9 ஆம் திகதிக்கும் டிசம்பர் 1ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், ‘டயானா கமகே’ என்ற பெயரில் அவருக்கு வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டையைப் பெறுவதற்காக, ஆட்பதிவுத் திணைக்கள அதிகாரிகளை ஏமாற்றுவதற்காக பிறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்த அல்லது உடந்தையாக இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் மூன்று குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
சட்டமா அதிபர் இந்த வழக்கு தொடர்பாக 14 தயாரிப்புகள் மற்றும் 23 அரசு தரப்பு சாட்சிகளையும் பெயரிட்டார்.