“மற்ற நகைச்சுவை நடிகர்களுக்கு வசனம் எழுதி கொடுக்க, நடிகர் வடிவேலு என்னை அனுமதிப்பதில்லை. ஆனால், அதையும் மீறி பல நகைச்சுவை நடிகர்களுக்கு நான் வசனம் எழுதி கொடுத்ததால் என்னை பழிவாங்கும் நோக்கில், அவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்” என்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் நடிகர் சிங்கமுத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் சிங்கமுத்து யூடியூப் சேனல்களுக்கு அளித்த பேட்டியில் தன்னைப் பற்றி அவதூறாக பேசியதாகவும், எனவே ரூ.5 கோடி மானநஷ்ட ஈடு கோரியும், தன்னைப் பற்றி அவதூறாக பேச சிங்கமுத்துவுக்கு தடை விதிக்கக் கோரியும் நடிகர் வடிவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் முன்பாக நேற்று (அக்.3) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் சிங்கமுத்து தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது: “நடிகர் வடிவேலு எனக்கு எதிராக கூறியுள்ள குற்றச்சாட்டுகளில் துளியும் உண்மை இல்லை.
பல உண்மைத் தகவல்களை மறைத்து அவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். நடிகர் வடிவேலுவுக்கு எதிராக நான் என்ன அவதூறாக பேசினேன் என்பது குறித்தும், அந்த அவதூறு வார்த்தை எது என்பது குறித்தும் அவர் தனது மனுவில் கூறவில்லை. நான் ஒருபோதும் வடிவேலுவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டும் என்ற எந்த உள்நோக்கத்துடன் பேசவில்லை. எனது சொந்த திரைத் துறை அனுபவத்தில், திரைத் துறையைச் சேர்ந்தவர்களின் பொதுப்படையான கருத்துகளை மட்டுமே தெரிவித்திருந்தேன். மானநஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரும் அளவுக்கு இந்த வழக்கில் எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை.
இந்த விவகாரம் தொடர்பாக வடிவேலு தரப்பில் எனக்கு அனுப்பப்பட்ட வழக்கறிஞர் நோட்டீஸுக்கு, என்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து பதில் நோட்டீஸ் அனுப்பிய போதும், என்னை துன்புறுத்தும் நோக்கில் நடிகர் வடிவேலு இந்த வழக்கை எனக்கு எதிராக தொடர்ந்துள்ளார். திரைப்படத் துறையைச் சேர்ந்த வடிவேலுவும், நானும் பல்வேறு திரைப்படங்களில் ஒன்றாக நடித்துள்ளோம். வடிவேலு உள்பட பல்வேறு நடிகர்களுக்கு நகைச்சுவை பாத்திரங்களுக்கான வசனங்களை நான் எழுதி கொடுத்துள்ளேன்.
நடிகர் வடிவேலுவின் வெற்றிக்குப் பின்னால் நானும் இருந்துள்ளேன். அதன் காரணமாகவே அவருக்கு பணமும், புகழும் சேர்ந்தது. தமிழ் திரையுலகில் ஒவ்வொரு நடிகரும் தங்களை மட்டுமே முன்னிலைப்படுத்துவது என்பது வழக்கான ஒன்று. தமிழ் திரைப்படங்களில் நானும் பல்வேறு படங்களில் நடித்துள்ளேன். இதன் மூலம் திரையுலகில் எனக்கும் நல்ல மதிப்பும், மரியாதையும் உள்ளது. நான் மற்ற நிறுவனங்களின் திரைப்படங்களில் நடிக்க என்னை வடிவேலு அனுமதிக்கவில்லை.
என்னைப் பற்றி தவறான தகவல்களை பல தயாரிப்பாளர்களிடம் கூறி எனக்கான திரைப்பட வாய்ப்புகளை அவர் தான் கெடுத்தார். சென்னை உட்பட பல்வேறு இடங்களில் சொத்துகளை வாங்க அவர் என்னைப் பயன்படுத்திக் கொண்டார். நான் அவருடன் இருந்தபோது மற்ற நகைச்சுவை நடிகர்களுக்கு வசனம் எழுதி கொடுக்க என்னை அனுமதிப்பதில்லை. ஆனால், அதையும் மீறி பல நகைச்சுவை நடிகர்களுக்கு நான் வசனம் எழுதி கொடுத்ததால் என்னை பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
நான் வாங்கிக் கொடுத்த ஒரு சொத்தில் வில்லங்கம் இருந்ததால் அதைப் பயன்படுத்தி எனக்கு எதிராக போலீஸில் புகார் அளித்தார். அந்த சொத்தை வாங்கியதால் அவருக்கு எந்த நிதியிழப்பும் ஏற்படவில்லை. ஆனால், ரூ.7 கோடியை ஏமாற்றிவிட்டதாக அவர் எனக்கு எதிராக அளித்த புகார் காரணமாக இன்று வரை அந்த வழக்கை எதிர்கொண்டு வருகிறேன். நான் வடிவேலுவுக்கு எதிராக எந்தவொரு அவதூறு கருத்துகளையும் தெரிவிக்கவில்லை.
நான் அளித்த பேட்டியை அவர் முழுமையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. தற்போது அந்த பேட்டி யூடியூப் வலைதளத்தில் இருந்தும் நீக்கப்பட்டு விட்டது. இனிவரும் காலங்களில் அவரைப் பற்றி பேசக் கூடாது என்ற நோக்கத்துடன் எனக்கு எதிராக நடிகர் வடிவேலு தொடர்ந்துள்ள இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்,” என்று அந்த மனுவில் கூறியிருந்தார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 24-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.