அரசியலில் இருந்து ஒதுங்கி விட்டேன், இனிமேல் நான் சகூக செயற்பாட்டாளர் என கூறியபடி அண்மைக்காலமாக கூட்டங்களில் பேசி வந்த க.அருந்தவபலன், தேர்தல் அறிவிக்கப்பட்ட கையுடன், தன்னை முதன்மை வேட்பாளராக நியமிக்க வேண்டுமென உடும்புப்பிடி பிடிக்க ஆரம்பித்துள்ளார்.
சாவகச்சேரியை சேர்ந்த முன்னாள் அதிபர் கந்தையா அருந்தவபாலன், சில முறை பொதுத்தேர்தல்களில் போட்டியிட்டும் வெற்றியீட்ட முடியவில்லை. ஒரு தடவை இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் முரண்பட்டுக்கொண்டு வெளியேறி, க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியில் இணைந்தார்.
கடந்த பொதுத்தேர்தலில் அந்த கட்சியில் போட்டியிட்டார். வெற்றியீட்ட முடியவில்லை. விக்னேஸ்வரனின் நடவடிக்கைகளில் அதிருப்தியடைந்து அந்த கட்சியிலிருந்து ஒதுங்கியிருந்தார்.
இதற்குள், க.அருந்தவபாலனின் சாதிப்பின்னணி பற்றி விக்னேஸ்வரன் விசாரணை நடத்திய தகவலும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
பின்னர், அரசியலில் இருந்தே ஒதுங்கி விட்டேன் என்றும், இனிமேல் சமூக செயற்பாட்டாளாராக மாத்திரமே இருப்பேன் என அறிவித்தார். அரசியல்வாதியிலிருந்து சமூக செயற்பாட்டாளராக மாறிவிட்டேன் என காண்பிக்கவோ என்னவே திடீரென வெண்தாடியுடனும் உலாவினார். நேர்காணல்களில் விக்னேஸ்வரனையும் விமர்சித்தார்.
தமிழ் தேசியவாதிகளிடையே இருக்கும் முரண்பாடுகள், அதிருப்திகள் எல்லாமே தேர்தல் வரைதான் என்ற பரவலான அபிப்பிராயம் உள்ளது. கதிரை ஆசை எல்லா கோபத்தையும் விட மேலானது அவர்களுக்கு. அதில் அருந்தவபாலனும் விதிவிலக்கல்ல என்பதை மெய்ப்பித்துள்ளார்.
இன்றைய திகதியில்- எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளராக தன்னையே அறிவிக்க வேண்டுமென விக்னேஸ்வரனின் சட்டையை பிடித்துக் கொண்டு நிற்கிறார் அருந்தவபாலன்.
நேற்று (1) விக்னேஸ்வரனை சந்தித்து பேசிய அருந்தவபாலன், யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளராக தன்னை அறிவித்தால் மட்டுமே போட்டியிடுவேன் என நிபந்தனை விதித்துள்ளார்.
இன்னும் ஏனைய வேட்பாளர்களை தெரிவு செய்யவில்லையென குறிப்பிட்ட விக்னேஸ்வரன், வேட்பாளர் தெரிவுக்காக 5 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுளளதாகவும், அந்த குழு வேட்பாளர்களை தெரிவு செய்த பின், ஏனைய விடயங்களை பேசலாம் என குறிப்பிட்ட பின்னர், தேர்தலில் போட்டியிட அருந்தவபாலன் சம்மதித்துள்ளார்.
அதாவது, கடந்த சில வருடங்களாக அரசியலில் நீதி, நேர்மையென சமூகத்துக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருந்தவர்- இப்பொழுது விக்னேஸ்வரனின் கட்சியில் முதன்மை வேட்பாளர் கோருகிறார். அவர் முதன்மை வேட்பாளர் கோரிய நாளிற்கு முதல்நாளில் விக்னேஸ்வரனின் மதுபானச்சாலை உரிமம் பற்றிய தகவல் வெளியாகியது.
அண்மையில் நடந்த தமிழ் மக்கள் கூட்டணியின் மத்தியகுழு கூட்டத்தில் மதுபானச்சாலைக்கு சிபாரிசு கடிதம் மாத்திரமே கொடுத்தேன், அதற்காக பணம் வாங்கவில்லையென விக்னேஸ்வரன் கூறியுள்ளார். ஆனால், இலங்கையில் மாவட்ட எம்.பியின் சிபாரிசு கடிதத்துடன் மதுபானச்சாலை உரிமம் வழங்கும் நடைமுறையில்லை, ஆனால் எம்.பிக்களிற்கு மதுபானச்சாலை உரிமம் வழங்கப்பட்ட போது, அவர்கள் இவ்வாறு கடிதம் வழங்கும் படிமுறையொன்று இருந்துள்ளது.
விக்னேஸ்வரனின் கட்சியில் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தவர்கள், “ஐயா சிபாரிசு கடிதம் மட்டுமே வழங்கினார். அவர் தேவையில்லாமல் மாட்டி விட்டார்“ என பலவந்தமாக நம்பலாம். ஆனால், உண்மை அதுவா என்பதே கேள்வி.