எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தாம் கலந்துகொள்வதில்லையென, ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்கிய தரப்பு தீர்மானித்துள்ளது.
இன்று திருகோணமலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
வெளிநாட்டு தூதரகங்களில் பணம் பெற்று, சிவில் சமூகமென இயங்கிய சில நபர்கள், அவர்களின் அனுசரணையில் செயற்பட்டு பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதி வந்த நபர்களும் பின்னணியில் இருந்து தமிழ் பொதுவேட்பாளர் என்ற கோசத்தை முன்னெடுத்தனர்.
இதை தொடர்ந்து வடக்கு கிழக்கில் உள்ள சில சிறிய குழுக்களின் பின்னணியில் தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்கினர். எனினும், அந்த முயற்சி வெற்றிபெறவில்லை.
இந்த நிலையில், பொதுவேட்பாளருக்காக களமிறங்கிய கட்சிகள் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதென்றால் மேற்படி நபர்களின் வழிநடத்தலில் செயற்படப் போவதில்லையென தீர்மானித்தன. பொதுவேட்பாளரை ஆதரித்த பல கட்சிகள், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பாக போட்டியிடப் போவதாகவும், சங்கு சின்னத்தை பயன்படுத்தப் போவதாகவும் குறிப்பிட்டனர்.
அத்துடன், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் தேர்தல் திணைக்களத்துக்கு எழுதிய கடிதத்தில், தமது கட்சியின் சின்னமாக சங்கை மாற்றுமாறு கோரியிருந்தனர். தேர்தல் அறிவிக்கப்பட்ட முதல் வாரத்தில் விடுக்கப்படும் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற அடிப்படையில், பெரும்பாலும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு சங்கு சின்னம் ஒதுக்கப்படும் என அறியப்படுகிறது.
இந்த நிலையில், அவசரஅவசரமாக திருகோணமலையில் கூடிய கட்டுரையாளர்களும், சில சிறிய குழுக்களும், அடுத்த பொதுத்தேர்தலில் தாம் போட்டியிடவோ, ஏதாவது விதத்தில் பங்குபற்றுவதோ இல்லையென தீர்மானித்துள்ளன.
அத்துடன், பொதுவேட்பாளரை களமிறக்கிய தரப்புக்கள் அற உணர்வு சார்ந்து, சங்கு சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என்று கோருவதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தமிழ் தேசிய கட்சிகள் ஒற்றுமையாக வேட்பாளர்களை நிறுத்தி தமிழர் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டுமென்று கோருவதென்றும் தீர்மானித்துள்ளனர்.