Pagetamil
இந்தியா

தமிழக அமைச்சரவையில் 3 பேர் நீக்கம்; 4 பேர் சேர்ப்பு – துணை முதல்வராக உதயநிதி நியமனம்

தமிழக அமைச்சரவையில் நேற்று மாற்றம் செய்யப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர்கள் மனோ தங்கராஜ், கே.ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். புதிய அமைச்சர்கள் ஆளுநர் மாளிகையில் இன்று மாலை பதவியேற்கின்றனர்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப் போகிறார் என்று பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவதற்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்டது. அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 26-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்த செந்தில்பாலாஜி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவருக்கான இலாகா பின்னர் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

இவரை போலவே, அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள டாக்டர் கோவி.செழியன், சா.மு.நாசர், பனைமரத்துப்பட்டி ஆர்.ராஜேந்திரன் ஆகியோருக்கும் இலாகா ஒதுக்கப்படவில்லை. தமிழக அமைச்சரவை தற்போது 5-வது முறையாக மாற்றி அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று, ஆளுநர் மாளிகை நேற்று இரவு வெளியிட்ட அறிவிப்பு: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கூடுதலாக திட்டம் மற்றும் வளர்ச்சித்துறையை ஒதுக்குவதோடு, துணை முதல்வராகவும் பொறுப்பு வழங்குமாறு தமிழக முதல்வர் ஆளுநரிடம் பரிந்துரைத்துள்ளார். மேலும், வி.செந்தில்பாலாஜி, கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன், சா.மு.நாசர் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கவும் முதல்வர் பரிந்துரைத்துள்ளார். இந்த பரிந்துரைகளுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அமைச்சர்களின் பதவியேற்பு விழா, இன்று (செப்.29) பிற்பகல் 3.30 மணியளவில் நடைபெறுகிறது.

அதேநேரம், பால்வளத்துறை அமைச்சரான டி.மனோ தங்கராஜ், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ராமச்சந்திரன் ஆகியோரை அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்குமாறு முதல்வர் அளித்த பரிந்துரைக்கும் ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இதுமட்டுமின்றி, அமைச்சர்களின் துறைகளை மாற்றம் செய்வது தொடர்பான முதல்வரின் பரிந்துரைக்கும் ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கிறார். அதன்படி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வனத்துறை அமைச்சராக மாற்றப்படுகிறார். சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்படுகிறார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், மனிதவள மேம்பாடு மற்றும் முன்னாள் படைவீரர்கள் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். வனத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தனுக்கு, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பால்வளம், காதி, கிராமத் தொழில்கள் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வசமிருந்த மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு பதிலாக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்ட கே.ராமச்சந்திரனுக்கு அரசு கொறடா பொறுப்பு வழங்கப்படும் என தெரிகிறது.

இதையும் படியுங்கள்

பிக்பாஸ் தர்ஷன் கைது!

Pagetamil

‘நான் உயிருடனும் ஆரோக்கியமாகவும் இருக்கிறேன்’ – சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நித்யானந்தா

Pagetamil

கச்சத்தீவை மீட்க உடனடி நடவடிக்கை தேவை: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Pagetamil

மனைவியை கொன்று சூட்கேசில் மறைத்த வைத்த கணவர் கைது

Pagetamil

பாலியல் வன்கொடுமை வழக்கில் அலகாபாத் ஐகோர்ட் வழங்கியது தவறான தீர்ப்பு: மத்திய அமைச்சர் அதிருப்தி

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!